Chitra Father: சித்ரா தந்தையின் ஆசை.. கடைசியாக சொன்ன அந்த வார்த்தை!
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவு அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அவரின் கடைசி ஆசையும், அவர் கடந்த சில நாட்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்துள்ளது.
மறைந்த நடிகை சித்ரா, விளையாடு வாகை சூடு, சட்டம் சொல்வது என்ன? போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதைத் தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார் சித்ரா. இவருக்கும் தொழிலதிபர் ஹேமந்திற்கும் 2020ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 2021ம் ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடக்க இருந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ந் தேதி பூந்தமல்லி அருகே உள்ள ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ரா தற்கொலை: சித்ராவும் அவரின் வருங்கால கணவரும் தான் ஓட்டலில் இருந்தனர். ஆனால், சித்ரா தற்கொலை செய்து கொண்ட போது, ஹேமந்த் இல்லாததால், சித்ராவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஹேமந்தை விடுதலை செய்து உத்தரவிட்டது. அவரின் விடுதலையை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், அரசு தரப்பு சாட்சியங்களை மகளிர் நீதிமன்றம் சரியாக கவனத்தில் கொள்ளாமல் ஹேமந்தை விடுதலை செய்துவிட்டது என்றும், எனவே அந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். அவர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அவரது தந்தையும் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
கதறிய தாய் : சித்ராவின் தந்தை தற்கொலை செய்து கொண்டது பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சித்ராவின் வழக்கில் ஹேமந்த் விடுதலையானதில் இருந்தே, தனது கணவர் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தார். சரியாக சாப்பிடாமல் எப்போதும் எதையோ யோசித்துக்கொண்டு இருந்தார். நானும் அவருக்கு பலமுறை தைரியமாக இருக்கும் படி கூறினேன் ஆனால், இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார். சித்ரா இருந்த அறையிலே, அவளின் துப்பட்டாவில் தூக்குமாட்டி இறந்துள்ளார்.
தந்தையின் ஆசை: சித்ரா இறப்பதற்கு முன்பு ஆசை ஆசையாக கட்டிய வீட்டில்தான் அவருடைய குடும்பத்தினர் வசித்து வந்தனர். சித்ராவின் திருமணத்தை பார்க்க வேண்டும் என்பது அவரின் ஆசையாக இருந்தது. ஆனால், மகள் தற்கொலை செய்து கொண்டதால், அதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று, நீதிமன்றத்தை நாடிய போதும், அதில் எந்த பலனும் இல்லாததால், இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார் என்று அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











