soori net worth: பாதியில் நின்ற படிப்பு..லாரி கிளீனர் வேலை..உழைத்து உயர்ந்த சூரியின் சொத்து மதிப்பு!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக மட்டும் இன்றி ஹீரோவாகவும் கலக்கி வரும் சூரி இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, தனுஷ் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் இணைந்து நடித்து தனது தனித்துவமான நகைச்சுவையால் தனக்கு என்று தனி இடத்தை பிடித்துவிட்டார்.

வெறும் 7ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள சூரி தனது கடுமையான உழைப்பால் இன்று கோடீஸ்வரராக இருக்கிறார். அவரின் பிறந்த நாளில் அவரின் சொத்து மதிப்பை பார்க்கலாம்.
நடிகர் சூரி: மதுரை மாவட்டம் ராஜாக்கூர் என்ற கிராமத்தில் முத்துசாமி மற்றும் வேங்கையரசி அம்மாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். அண்ணன், தம்பி என பெரிய குடும்பமாக இருந்ததால், அப்பாவின் வருமானம் மட்டும் போதவில்லை. இதனால் 8ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கிராமத்தில் கூலி வேலைகளை செய்தார்.
லாரி கிளீனர்: சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்த சூரி சினிமா வாய்ப்பை தேடி அலைந்தார். ஆனால், கிடைத்தது என்னமோ லாரி க்ளீனர் வேலைதான். இதனால், வேலை செய்து கொண்டே சினிமா வாய்ப்பைத் தேடினார். அப்போது தான், மர்மதேசம் சீரியலில் எலெக்ட்ரீஷியனாகவும், பெயிண்டராகவுமே வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது அதையும் சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது கனவை நோக்கி நடந்தார்.

புரோட்டா சூரி: கடுமையான முயற்சிக்கு பிறகு மறுமலர்ச்சி படத்தில் கூட்டத்தில் ஒருவராகத் தலைக்காட்டும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, வெண்ணிலா கபடிக் குழு படம் சூரிக்கு மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில், 50 புரோட்டா சாப்பிட்டால், 100 ரூபாய் வழங்கப்படும் என்றும், சாப்பிட்ட புரோட்டாவுக்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை என்றும் போட்டி நடத்தப்படும். போட்டியில் கலந்து கொண்ட சூரி, 50 புரோட்டா சாப்பிட்டு அன்றிலிருந்து புரோட்டா சூரி ஆனார்.
கான்ஸ்டபிள் குமரேசன்: தனக்கென ஒரு கிராமத்து ஸ்லாங்கை உருவாக்கி கவனிக்க வைத்த சூரி, சீரியஸான காட்சிகளில் நடித்தது என்பது மிக மிக குறைவு. அப்படிப்பட்ட சூரி விடுதலை பாகம் 1 படத்தில் மொத்தமாக மாறி சிக்ஸ் பேக்ஸ், நடை, உடை என மொத்தத்தையும் மாற்றி கான்ஸ்டபிள் குமரேசனாக மனதில் பதிந்துவிட்டார். கான்ஸ்டபிள் குமரேசனை இரண்டாம் பாதியில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள்.
சொத்து மதிப்பு: கடுமையாக உழைத்து முன்னேறி உள்ள நடிகர் சூரி, சொந்த ஊரான மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் ஓட்டல் ஆரம்பித்து குறைவான விலையில் தரமான உணவை கொடுத்து வருகிறார். மதுரையில் முதலில் உணவகத்தை தொடங்கி அதன் பிறகு மதுரையை சுற்றியுள்ள பல இடங்களில் கிளைகளையும் தொடங்கி உள்ளார். தொழிலதிபராக மாறி உள்ள நடிகர் சூரிக்கு 40 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், toyota fortuner, Honda city, audi RS5 என 3 சொகுசு கார்களை வைத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











