Year Ender 2023: வசூலை அள்ளிய மாமன்னன்.. வடிவேலுவின் மனைவியாக நடித்த கீதா கைலாசம் யார் தெரியுமா?
சென்னை: உதயநிதி ஸ்டாலின் வடிவேலு நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட மாமன்னன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்த கீதா கைலாசம் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?
2023 ஆண்டு இன்றோடு முடிவடைய உள்ளது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல், சினிமா, பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு ஏராளமாக நடந்துள்ளன. அந்த வகையில் 2023ம் ஆண்டு ரசிகர்களை மிகவும் கவர்ந்த திரைப்படம் தான் மாமன்னன்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், ரவீனா ரவி, கீதா கைலாசம் ஆகியோர் நடித்திருந்தனர். வசூலை அள்ளக்குவித்த இந்த படத்தில், மாமன்னனாக வடிவேலு நடித்திருந்தார். மேலும், அவரின் மனைவியாக கீதா கைலாசம் நடித்திருந்தார். இவர் குறிப்பிட்ட சில காட்சிகளில் வந்தாலும் அந்த காட்சி மனதை விட்டு விலகாமல் அழுத்தமானதாக மனதில் பதிந்து விட்டது.

நடிகை கீதா கைலாசம்: இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரை தெரியாதவர்களே இருக்க முடியாது. அவரது மகன் பால கைலாசத்தின் மனைவி தான் கீதா கைலாசம். எழுத்தாளரான இவர் இப்போது குணச்சித்திர நடிகையாக குறிப்பிட்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர், பா ரஞ்சித்தின் இயக்கத்தில் ஓடிடியில் நேரடியாக சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து கவனிக்கப்படும் நடிகையானார். இந்த படத்தில் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் பசுபதி நடித்து கைத்தட்டலை பெற்றார். இப்படத்தில் பசுபதியின் மனைவியாக ஒரு சில காட்சிகள் வந்து போனாலும் ரசிகர்களின் மனதை தொட்டார் கீதா கைலாசம். இந்த படத்தை தொடர்ந்து வீட்ல விசேஷம் படத்தில் செவிலியராக நடித்திருந்தார்.

இயல்பான நடிப்பு: இதையடுத்து, மாமன்னன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார். மாமன்னன் படத்தின் மொத்த கதையை தோளில் தூக்கி சுமந்த வடிவேலுக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார் கீதா கைலாசம். மகன் உதயநிதியை நினைத்து வருத்தப்படுவது, கணவர் வடிவேலுவை மாமா மாமா என அழைப்பது என, அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் அழகாக செய்தார். கிளைமாக்ஸ் காட்சியில் ரௌடிகள் வீட்டை அடித்து நொறுக்கும் போது, பயந்து போய் கட்டிலுக்கு அடியில் பயந்தோடி ஒளிந்து இருக்கும் காட்சியில், ஒடுக்கப்பட்ட மக்களின், வலியையும் கண்முன் கொண்டுவந்தார். இந்த படத்தில் கீதா கைலாசத்தின் நடிப்பு பாராட்டை பெற்றது.


Click it and Unblock the Notifications











