ரியல் சூப்பர் ஹீரோக்கள்.. சல்மான் கான் டு பிருத்விராஜ்.. டாக்டர்களுக்கு சல்யூட் அடித்த பிரபலங்கள்!
சென்னை: தேசிய மருத்துவ தினம், நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.
கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோய் தாக்கத்தில் இருந்து நம்மை காக்க அனுதினமும் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி வரும் ரியல் சூப்பர் ஹீரோக்களுக்கு பல பிரபலங்களும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இரவு, பகல் பாராமல் நோயாளிகளின் நோயை தீர்த்து குணமாக்க போராடும் ஒவ்வொரு மருத்துவர்களுக்கும் ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட் சார்பாக ராயல் சல்யூட்.

தாங்கும் தூண்கள்
பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது டிவிட்டர் பக்கத்தில் மிகவும் உருக்கமாக மருத்துவர்கள் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். "இக்கட்டான நேரத்திலும் வலிமையான தூண்களாக இருந்து நாட்டையே தாங்கி வருகிறார்கள் மருத்துவர்கள். அவர்களது தியாகங்களும், போராட்டங்களும் ஒவ்வொரு குடிமகன்களாலும் என்றுமே மறக்க முடியாது" என பதிவிட்டுள்ளர்.

கொரோனா போராளிகள்
உலகத்தையே ஒரு புதிய நோய் ஆட்டி படைத்து வரும் சூழலில், தங்கள் உயிரை துச்சமென நினைத்து ஏகப்பட்ட மருத்துவர்கள் கொரோனா போராளிகளாக இந்த போராட்டத்தில் நமக்கு முன்னால் நின்று நம்மை பாதுகாக்கின்றனர். அந்த போராளிகளின் போராட்டத்திற்கு மதிப்பு கொடுத்து நாமும் உரிய பாதுகாப்பு முறைகளை பின் பற்றவேண்டும் என நடிகர் மோகன் லால் ஆடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

குணமடைந்தோர் பட்டியல்
"பரவிடும் தொற்று நமை பயமுறுத்தும் போது, குணமடைந்தோர் பட்டியல் தாம் நம் நம்பிக்கையின் ஊற்று. அந்த பட்டியலை நீள்விக்க, என் குடும்பம், என் பாதுகாப்பு என பாராமல், மக்கள் சேவையே முக்கியம் எனக் கருதும் மருத்துவர்களுக்கு நம் நன்றிகளும், மருத்துவர் தின வாழ்த்துக்களும்" என நடிகர் கமல்ஹாசன் தனது பாராட்டுக்களை பதிவிட்டுள்ளார்.

சுயநலமில்லாதவர்கள்
தங்கள் உயிரை இந்த நேரத்தில் காத்துக் கொள்ள வேண்டும் என தங்களை எந்தவொரு மருத்துவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை. பல மில்லியன் உயிர்களை காப்பாற்ற போராடி வரும் ஒவ்வொரு மருத்துவருக்கும் இந்த நல்ல நாளில் அவர்களுக்கு நன்றியை சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் என நடிகர் தனுஷ் ட்வீட் போட்டுள்ளார்.

எங்களுக்காக போராடுறீங்க
நடிகர் பிருத்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு மருத்துவர்களின் சேவையை பாராட்டி மருத்துவர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். "உலகத்தையே தாக்கி வரும் இந்த கொடிய நோயில் இருந்து மக்களை எப்படியாவது காக்க வேண்டும் என பாதுகாப்பு கவசங்களாக போராடி வரும் உலக மருத்துவர்கள் அனைவருக்கும் இனிய மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்" எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











