Suriya: சூர்யா அதை செய்திருக்க கூடாது.. என்னை நம்பல.. என்ன தப்பா போயிடும்? கௌதம் மேனன் ஆதங்கம்!
சென்னை: தமிழ் சினிமாவில் கிளாஸான இயக்குநர் என பெயர் பெற்றவர், கௌதம் வாசுதேவ் மேனன். இவர் தனது முதல் படமான மின்னலே படத்தில் இருந்து தமிழ் சினிமாவில், தனது படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் தனது சினிமாக்களுக்கென தனி அடையாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் டாம்னிக். மம்மூட்டி நடித்துள்ள இந்தப் படம் வரும் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகர் சூர்யா குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
நடிகர் சூர்யா, தற்போது, தனது 45வது படத்தில் நடித்து வருகின்றார். இவரது 44வது படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ரெட்ரோ என படக்குழு பெயரிட்டுள்ளது. இப்படியான நிலையில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேட்டி ஒன்றில் சூர்யா மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளது, சூர்யா ரசிகர்கள் மத்தியில் கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் சிலர், கௌதம் மேனன் பேசுவது சரிதான் எனவும் கூறி வருகின்றனர்.

சூர்யா: அந்த பேட்டியில், கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில், " சூர்யாவிடம் துருவ நட்சத்திரம் படத்தின் கதைச் சொன்னேன். அவர் கதையைக் கேட்டுவிட்டு, இந்தப் படத்திற்கு என்ன ரெஃபரன்ஸ் எனக் கேட்டார். நான் உடனே, நான் உருவாக்கியுள்ளேன். இது எனது கற்பனையில் உருவான படம். துருவ நட்சத்திரம் படத்தினை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பார்க்கவேண்டும் என நினைத்தேன். சூர்யா துருவ நட்சட்திரம் படத்தில் நடிக்க யோசித்திருக்கவே கூடாது என்றுதான் நான் யோசித்தேன். காக்க காக்க, வாராணம் ஆயிரம் படங்களில் அவர் என்னை முழுமையாக நம்பினார். ஆனால் இந்தப் படத்தில் அவர் அப்படி நம்பவில்லை.

நம்பிக்கை: இந்தப் படத்தின் தயாரிப்பாளராகவும் நான் இருந்தேன். துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தால் என்ன ஆகிவிடும்? அடுத்த பட வாய்ப்பு சூர்யாவுக்கு வராமல் போய்விடுமா? அவர் என்னை நம்பவில்லை. அவருக்கு காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற படங்களைக் கொடுத்த இயக்குநரை அவர் நம்பவில்லை. எனக்கு ஃபேவராகக் கூட நான் எதுவும் கேட்கவில்லை. உங்களுக்கு இந்த கதை பிடிக்காமல் இருக்கலாம், புரியாமல் இருக்கலாம். ஆனால் என்ன தப்பாகிவிடும்? நான் தான் தோன்றித்தனமாகவோ, தலைக்கணத்துடனோ எதையும் செய்யவில்லை.

வருத்தம்: நான் ஏன் இன்னும் துருவ நட்சத்திரம் படத்தின் மீது இவ்வளவு உறுதியாக இருக்கின்றேன் என்றால் அதற்கு காரணம், படம் கடந்த வாரத்தில் எடுத்ததைப் போல் உள்ளது. மத கஜ ராஜா படம் வெளியான பின்னர் எனக்கு இன்னும் கூடுதல் நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் வந்துள்ளது. துருவ நட்சத்திரம் படத்தை நான் எடுக்க காரணம், பணத்திற்காக இல்லை அதேபோல், நான் எந்த இடத்தில் இருக்கின்றேன் என்பதற்காக இல்லை. படத்தை உலகத் தரத்தில் கொடுக்க நினைத்தேன். அவ்வளவுதான். துருவ நட்சத்திரம், படத்தில் யார் வேண்டுமானாலும் பணியாற்ற முடியாது எனக் கூறியிருக்கலாம். ஆனால், சூர்யா நடிக்கமாட்டேன் எனக் கூறியது எனக்கு வருத்தத்தைக் கொடுத்தது. என்ன தப்பாக போய்விடும்" என பதில் பேசியுள்ளார். இவரது பேச்சு, பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் துருவ நட்சத்திரம் விரைவில் வெளியாகவும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











