இந்தியனாக இரு.. சீனப் பொருள்களை வாங்காதே! - அர்விந்த் சாமி வேண்டுகோள்

இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் 19 கிமீ தூரம் அத்து மீறி ஊடுருவியுள்ளது சீனப் படை. கிட்டத்தட்ட டெல்லி மாநிலத்தின் பாதிப் பரப்பளவுக்கு இணையான பகுதி இது.
இது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது ஊடுருவலை நியாயப்படுத்தி வரும் சீனா, அங்கிருந்து பின்வாங்கவும் மறுத்து வருகிறது.
இந்திய பிரபலங்கள் இதுகுறித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழ் நடிகர்களில் அரவிந்த்சாமி சீனாவுக்கு எதிராக தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
டிவிட்டரில், "நமது நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆனால் இந்தியாவோ எதையும் செய்யாமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் நாம் அப்படி இருக்க முடியாது. இனி சீனாவிலிருந்து வரும் எந்தப் பொருளையும் நாம் வாங்கக் கூடாது. இந்தியனாக இரு, இந்தியப் பொருள்களை வாங்கு என்பதை, இனி, இந்தியனாக இரு, சீனப் பொருள்களை வாங்காதே, என மாற்றிக் கொள்வதே சரியானது, என்று தெரிவித்துள்ளார்.
நம் நிலங்களை திருட்டுத் தனமாக ஆக்கிரமித்திருக்கும் ஒரு நாட்டின் உற்பத்திப் பொருளை இந்தியர் ஏன் வாங்க வேண்டும்? நமது நிஜமான எதிரியான சீனாவுக்கு நமது ஒரு பைசா கூட போகக் கூடாது. சீனப் பொருள்களைத் தவிர்ப்பதன் மூலம் நாம் சுயமரியாதை உள்ளவர்கள் என்பதை நிரூபிப்போம். சீனப் பொருள்களை புறக்கணிப்பதை ஒரு இயக்கமாக மாற்றுவோம். இனி சீனாவிலிருந்து எந்தப் பொருளும் வரக்கூடாது என இந்திய அரசு தடை விதிக்க வேண்டும்,' என்று கூறியுள்ளார் அர்விந்த்சாமி.


Click it and Unblock the Notifications











