வடிவேலு மாதிரி பண்ணா வாழவே முடியாது.. ‘ஸ்டார்’ பட நடிகர் காதல் சுகுமாருக்கு கமல் சொன்ன அட்வைஸ்!
சென்னை: 'காதல்' படத்தில் காமெடி நடிகராக நடித்து பிரபலமான சுகுமார் அதன் பின்னர் 'காதல்' சுகுமார் என்று அழைக்கப்பட்டு வருகிறார். ஆனால், இந்த ஆண்டு முதல் 'ஸ்டார்' சுகுமார் என அவர் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு வெயிட்டான கதாபாத்திரம் அவருக்கு கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படத்தில் கிடைத்துள்ளது.
இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள 'ஸ்டார்' படமே அவருடைய பயோபிக் தான் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருவதாகவும் 'காதல்' சுகுமார் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

வடிவேலு மாதிரி நடிக்க வேண்டாம் என கமல்ஹாசன் ஒருமுறை தன்னிடம் அறிவுரை வழங்கியதாகவும் சினிமாவில் பல ஏற்றத்தாழ்வுகளை தான் சந்தித்ததாகவும் காதல் சுகுமார் பேட்டி ஒன்றில் சினிமாவில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார்.
ஸ்டார் படத்தில் காதல் சுகுமார்: கவின், லால், அதிதி போங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஸ்டார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. கவின் நடிப்பைத் தாண்டி அந்த படத்தில் பலரது கவனத்தையும் கவர்ந்தது 'காதல்' சுகுமார் கதாபாத்திரம்தான்.

ஐஸ் விக்கிற நிலைக்கு: ஆரம்பத்தில், போலீஸ் காஸ்டியூமில் மீசை எல்லாம் வைத்துக்கொண்டு கேரவனில் சொகுசாக வடிவேலு நடித்த டெலக்ஸ் பாண்டியன் போல காதல் சுகுமார் இருக்கும் காட்சியும் அவரிடம் வாய்ப்பு தேடி கவின் வருவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். ஆனால் அதன் பின்னர் ஒரு கட்டத்தில், ரோட்டில் ஐஸ் விற்றுக் கொண்டிருக்கும் நபராக காதல் சுகுமார் வரும் இடம் ஒட்டுமொத்த தியேட்டரே மயான அமைதியாக மாறிவிடும். சினிமாவில் ஒரு கட்டத்தில் உச்சத்தில் இருப்பவர்கள் இன்னொரு கட்டத்தில் கீழே இறங்கி வரும் வலி நிறைந்த காட்சியை அவரது கதாபாத்திரம் காட்டியிருக்கும்.
வடிவேலு வசனம் பேச பயந்தேன்: கருப்பா இருக்கிறவனெல்லாம் வடிவேலு ஆகிவிட முடியாது என ஸ்டார் படத்தில் வரும் வசனத்தை பேச முதலில் தயங்கியதாகவும் ஆனால் அந்த வசனம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இயக்குநர் சொன்னதும் ஓகே சொல்லி பேசி நடித்ததாகவும் 'காதல்' சுகுமார் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

கமல் சொன்ன அட்வைஸ்: ஆரம்பத்தில், வடிவேலு போலவே நடித்து வந்தேன். ஒருமுறை கமல் சார் என்னைப் பார்த்து வடிவேலு மாதிரி நடிக்காத என்றும் இன்னொரு நடிகர் போல மிமிக்ரி கூட செய்து நடிக்கக்கூடாது. அதன் பின்னர் உன்னுடைய ஒரிஜினாலிட்டி போய்விடும் என அட்வைஸ் கொடுத்தார் என்றும் சுகுமார் காதல் சுகுமார் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
சிலருக்கு பிடிக்கவில்லை: சில பெரிய நடிகர்களுக்கு நான் நடிப்பது பிடிக்கவில்லை. வடிவேலுவுக்கு பதிலாக என்னை சிலர் படத்தில் ஒப்பந்தம் செய்தாலும் அவனுடன் எல்லாம் நடிக்க முடியாது என்பார்கள். உடனடியாக படப்பிடிப்பிலிருந்து வெளியேற வேண்டிய நிலை எல்லாம் உருவாகி இருக்கிறது. ஒரு கட்டத்தில், அந்த நடிகர் படம் என்றால் நானே வேண்டாம் என கூறி விடுவேன் இப்படியெல்லாம் என் வாழ்வில் ஏகப்பட்ட கசப்பான திரை அனுபவங்கள் நிறைந்துள்ளன என 'காதல்' சுகுமார் தனது சோக கதையை கூறியுள்ளார். ஸ்டார் படத்துக்குப் பிறகு 'காதல்' சுகுமார் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











