»   »  ஏன்டா ஜெயிச்சோம்னு இருக்கு... ப்ளீஸ் என்னை வெறுக்காதீங்க!- சூப்பர் சிங்கர் ஆனந்த்

ஏன்டா ஜெயிச்சோம்னு இருக்கு... ப்ளீஸ் என்னை வெறுக்காதீங்க!- சூப்பர் சிங்கர் ஆனந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் சிங்கர் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றும் அதைக் கொண்டாட முடியாத அளவுக்கு சூழல் மோசமாகிவிட்டது. ஏன்டா ஜெயிச்சோம்னு இருக்கு, என்று ஆனந்த் அரவிந்தாக்ஷன் கூறியுள்ளார்.

சென்ற வாரம் நடைபெற்ற சூப்பர் சிங்கர் 5-ன் இறுதிச்சுற்றில் பரீதா, ராஜ கணபதி, சியாத், ஆனந்த் அரவிந்தாக்‌ஷன், லட்சுமி ஆகிய ஐந்து பேர் போட்டியிட்டார்கள். தமிழ்த் திரையிசை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் வாக்குகளின் அடிப்படையில் ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடம் பரீதாவுக்குக் கிடைத்தது. லட்சுமி, சியாத் ஆகியோர் கடைசி இரு இடங்களைப் பிடித்தார்கள்.

Dont hate me pl, says Super Singer winner Anand

முதலிடம் பிடித்த ஆனந்துக்கு ரூ. 75 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆனந்தின் தேர்வு குறித்து பெரும் சர்ச்சை உருவாகியது. ஆனந்த் ஏற்கெனவே சுந்தரபாண்டியன், நீர்ப்பறவை உள்ளிட்ட 10 தமிழ்ப் படங்களில் பாடியுள்ளவர் என்கிற தகவல் வெளியானது.

இதனையடுத்து, ஏற்கெனவே பின்னணிப் பாடகராக உள்ளவர் சூப்பர் சிங்கர் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது ஏன் என்கிற கேள்வியைப் பலரும் சமூகவலைத்தளங்களில் எழுப்பினார்கள்.

இதற்கு விஜய் டிவியும் ஒரு விளக்கத்தை வெளியிட, அதுவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் ஆனந்த் தன் தரப்பு நியாயத்தை விளக்கியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

'கடந்த இரண்டு தினங்களாக நான் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருந்திருக்க வேண்டும். கடினமாக உழைத்துப் பெற்ற வெற்றியை மகிழ்ச்சியாகக் கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால் இந்த வெற்றி எனக்கு அப்படியான ஒரு சந்தோஷத்தைத் தரவில்லை. இந்த கடுமையான நேரத்தில் எனக்கு ஆதரவு அளித்தவர்களையும் விஜய் தொலைக்காட்சியையும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.

இந்த வெற்றியை நான் எளிதாக அடைந்துவிடவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு முன் பாடியிருக்கிறேன் தான். ஆனால் பின்னணி பாடகர் என்றால் ஒரு பாடல் பாடியவரையும் அப்படித்தான் சொல்கிறோம், ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய எஸ்;பி;பி சாரையும் அதே பெயரில் தான் அழைக்கிறோம். என்ன செய்வது? இதற்கு முன்னர் பாடியிருக்கேன் என்பது அத்தனை பெரிய குற்றமா?

நான் இதற்கு முன் பாடியிருக்கிறேன் என்பதை என்றுமே மறைத்ததில்லை. என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் என்னைப் பற்றிய முழு விபரங்கள் இப்போதும் உள்ளது. மறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் அதையெல்லாம் என்றோ அழித்திருப்பேன் அல்லவா? தவிர என்னுடன் பாடியவர்கள், போட்டியிட்டவர்கள் அனைவருக்கும் நான் பாடகன் என்று தெரியும். அவர்கள் ஒருவரும் இதுவரை எனக்கு எதிராக எதுவும் சொன்னதே இல்லை. தமிழகத்தின் பிரம்மாண்டக் குரல் தேடல் என்பதால் முன்பு பாடியிருக்கவே கூடாது என்று விதிமுறையில் நிச்சயமாக இல்லை.

என்னுடைய இந்தப் பாதையும் பயணமும் அத்தனை எளிதாக நான் கடந்து வந்ததல்ல. பாடல் பதிவு அரங்கில் பாடுவதற்கும் நேரலையான இத்தகைய நிகழ்ச்சியில் பாடுவதற்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளன. மிகக் கடின உழைப்பும் இதற்குத் தேவை. நான் அப்படித்தான் ஒவ்வொரு முறையும் தேவையான பயிற்சியுடன் தான் வந்து பாடினேன். அதன் பிறகே இந்த வெற்றி சாத்தியமானது. பத்து வருட போராட்டத்துக்குப் பின் ஒரு சிறிய நம்பிக்கையின் ஒளி என் பாதையில் தென்பட்ட போது அதை நான் பின் தொடர்ந்தேன். அது தான் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.

இந்த வெற்றியின் சந்தோஷத்தை உணர முடியாமல் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து நிற்பது போல் உள்ளது. இதற்கு முன் என்னை நேசிக்க இத்தனை அதிகம் பேர் இருந்ததில்லை என்றாலும் என்னை இக்காரணத்துக்காக வெறுத்தவர்களும் இல்லைதானே?

மன அமைதியுடன் இருந்தேன் ஆனால் இப்போது நிம்மதி இழந்து நிற்கிறேன். ஏன் தான் ஜெயித்தேன்? எதற்காக இந்த வெற்றி?," என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Super Singer winner Anand requests the people no to hate him just because of he is a playback singer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil