»   »  உண்மை தெரியாமல், புரியாமல் இசைஞானி மீது கல்லெறியாதீர்கள்!

உண்மை தெரியாமல், புரியாமல் இசைஞானி மீது கல்லெறியாதீர்கள்!

By Shankar
Subscribe to Oneindia Tamil

இசைஞானி இளையராஜா எஸ்.பிபி. இருவருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பல்வேறு தரப்பில் பலவிதமான கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இளையராஜா ஏதோ பணத்தாசைப் பிடித்தவர் போலவும், எஸ்.பி.பி. அவர்கள் ஆசைகளைத் துறந்தவர் போலவும் இணையதளத்தில் கருத்துகளை கூறி வருகிறார்கள். எஸ்.பி.பி.மீது உள்ள காதல் அல்லது இளையராஜா மீதான காரணமில்லா வெறுப்பு காரணமாக கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இது அவர்களின் அறியாமையத்தான் காட்டுகிறது. இது ஏதோ திடீரென்று எஸ்.பி.பிக்கு எதிராக இளையராஜா போட்ட தடை என்பதுபோல் சிலர் தவறாக புரிதலுடன் இருக்கிறார்கள்.

Dont pelt stones on Ilaiyaraaja without knowing facts

இது ராஜா சார் அவருக்காக மட்டும் எழுப்பிய குரல் அல்ல. அவரைப்போல் இசையை நம்பி இருக்கும் பல இசைக் கலைஞர்களுக்காக, பாடகர்களுக்காக கொடுத்த குரல். இதை சில ஆண்டுகளுக்கு முன்பு இசைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக சென்னையில் நடந்த கூட்டத்தில் இளையராஜா பேசிய வார்தைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தலைமை சங்கம் சார்பாக கடந்த 30.06.2015 செவ்வாய்க்கிழமையன்று காலை 10 மணிக்கு சென்னை தி.நகர் வாணி மஹாலில் இசைஞானி இளையராஜா அவர்கள் அழைப்பின் பேரில் மெல்லிசைத் துறை பற்றிய ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் மெல்லிசைக்குழு நடத்தும் தலைவர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் இசைஞானி இளையரஜா பேசியதை மீண்டும் ஒருமுறை தருகிறேன்.

"நான் உங்களிடம் பணம் கேட்டு வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். நான் எப்போதும் கொடுப்பவன்... கேட்பவன் அல்ல. அது உங்களுக்கே தெரியும். எத்தனையோ ஆயிரம் பாடல்களை உங்களுக்காக வழங்கியவன்.
இப்போதைக்கு நான் சந்திக்க வந்திருக்கின்ற காரணம் என்னவென்றால்,
என்னுடைய பாடல்களையோ மற்றவர்கள் பாடல்களையோ நீங்கள் பாடும் போது சட்டப்படி அதற்கு அனுமதி பெற வேண்டும் என்பது நடைமுறை.

இதை உங்களிடம் இருந்து பெறுவதற்காக இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள் இணைந்து உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஐ.பி.ஆர்.எஸ்.
இதை சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஐ.பி.ஆர்.எஸ் நிர்வாகம் தவறான கணக்குகளைக் காட்டி அந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள என் போன்றவர்களை ஏமாற்றி வருகிறது. என் பாடல்களுக்காக அவர்கள் வசூலிப்பதில் பத்து சதவீதம் கூட எனக்கு வந்து சேர்வதில்லை. எந்த இசை அமைப்பாளருக்கும் நியாயமாய் சேர வேண்டியவை சென்று சேர்வதில்லை.

என்னைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் இசை நிகழ்ச்சியில் உங்கள் பாடல்களைத்தான் எண்பது சதவீதத்திற்கு மேல் பாடுகிறேன் என்று சொல்கிறீர்கள். ஆனால் எனக்கு ஐந்து சதவீதமோ பத்து சதவீதமோ கொடுத்து விட்டு அந்த செலவு இந்த செலவு என்று கணக்கு காட்டி ஏமாற்றுகிறார்கள் ஐ.பி.ஆர்.எஸ் நிர்வாகத்தினர். எனக்கே இப்படி என்றால் மற்ற இசையமைப்பாளர்களுக்கு என்ன கொடுப்பார்கள்?
அதே போல் அவர்களிடம் இத்தனையாவது வருடம் வந்த பாடலுக்கு இத்தனை ரூபாய் என்று நிர்ணயம் செய்துள்ளீர்களா? இந்த உறுப்பினரின் பாடலுக்கு இத்தனை ரூபாய் என்று விதிமுறை இருக்கிறதா ? இது போன்ற கேள்விகள் எதற்குமே விடை இல்ல. அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டுமாம். என்ன நியாயம் இது ?
அதனால் அந்த நிர்வாகத்தின் செயல்பாடுகளின் மேல் நம்பிக்கை இல்லாததால் அந்த அமைப்பிலிருந்து நான் விலகிக் கொள்ள முடிவு செய்து விட்டேன்.

எவனோ ஒருவன் என் பெயரை சொல்லி பணம் வசூலித்து உங்களையும் என்னையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். அதனால் உங்களிடமே நேரடியாக இதைச் சொல்லி என் பாடல்களுக்கான தொகையை என் அலுவலகத்தில் நேரடியாக செலுத்த சொல்லலாம் என யோசித்து உங்களை அழைத்தேன். அதே போல் இவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்று நான் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் சேர்ந்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன் நான் கேட்பவன் அல்ல கொடுப்பவன். நானும் இதுபோன்ற மேடைகளில் இசை நிகழ்ச்சி, நாடகத்தின் பின்னணி இசை என்று வாசித்து இசையமைப்பாளனாக வந்ததால் உங்கள் உணர்வுகள் எனக்கு நன்றாகத் தெரியும். கண்ணுக்குத் தெரியாமல் ஒரு அமைப்பு நம்மை ஏமாற்றிக் கொண்டிருப்பதால் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.

மற்றவர்களின் பாடல்களுக்கும் நீங்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் அமர்ந்து பேசி முடிவெடுங்கள். குறிப்பாக ஒரு நிகழ்ச்சியில் எத்தனை பாடல்கள் பாடுகிறீர்கள் அதற்கு எவ்வளவு கொடுக்கலாம் என்று நீங்களும் சினி மியூசிக் யூனியனுடன் அமர்ந்து பேசியும் முடிவெடுக்கலாம். ஐ.பி.ஆர்.எஸ் மூலம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்த கூட்டத்தின் மூலம் இந்த பிரச்னையை நாமே தீர்த்துக் கொள்வோம்.

இல்லாவிட்டால் நாமே ஒரு புதிய அமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.
இப்போதே கூட ஒரு கமிட்டியை போடுங்கள் நாம் ஏன் மற்றவர்களிடம் ஏமாற வேண்டும்?

அதே போல் இந்தக் கூட்டம் நடத்தப்படுவது பற்றி சில கேள்விகள் உள்ளன. இதை ஏற்பாடு செய்தவர்கள் அவ்வப்போது கண்களில் தென்படுகிறார்கள், தொடர்ந்து பல நல்ல திட்டங்களை செய்கிறார்கள். அதனால் இவர்களிடம் சொல்லி இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்யச் சொன்னேன்.

சில பேருக்கு இதில் வருத்தமுண்டு. எதிரில் வந்தால்தானே பொறுப்புகளை ஒப்படைக்க முடியும். எதையும் செய்யாதவர்களிடமும், கண்ணில் தென்படாதவர்களிடமும் எப்படி செய்யச் சொல்ல முடியும். எல்லா இடங்களிலும் இருப்பது போல் உங்கள் அமைப்புகளிலும் சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. முதலில் நீங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுங்கள் அப்போதுதான் ஐ.பி.ஆர்.எஸ் போன்ற அமைப்புகளை சரியாக எதிர்கொள்ள முடியும்.

மீண்டும் ஒரு முறை வேண்டுமானாலும் இது போல் ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்யுங்கள். ஒரு குழுத் தலைவர் விடாமல் வரவழையுங்கள் நான் மீண்டும் வருகை தந்து இது பற்றி உங்களிடம் பேசுகிறேன்.

பாபநாசம் சிவன், டி.ஆர்.மகாலிங்கம், ஜி.ராமநாதன், தக்ஷிணா மூர்த்தி, எம்.எஸ்.ஞானமணி, எஸ்.எம் சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இன்றைக்கு இருக்கின்ற இசையமைப்பாளர்கள் வரை அனைவருக்கும் பலன் கிடைக்கட்டும். நம்முடன் இருந்தவர்களும் இருப்பவர்களும் பயன் பெற நாம் பாடுபடுவோம்.

இங்கே அறிவிப்பாளர் பேசும் போது ஏழை இசைக் கலைஞர்கள் என்று குறிப்பிட்டார். இசைக் கலைஞர்கள் எவருமே ஏழை இல்லை. உலகிலேயே தினமும் தான் செய்யும் தொழிலின் போது மகிழ்ந்து செய்பவர்கள் இசைக் கலைஞர்களே. சாப்பாடு இல்லாவிட்டால்கூட ஒரு பாடலை தனக்குள்ளாகவே பாடி சந்தோஷப்பட்டு திருப்தி அடைபவன் இசைக் கலைஞன். உதாரணத்திற்கு ஷிவ சத்யாய.... பாடலை பாடிப் பாருங்கள் உங்களுக்குத் தெரியும். மற்ற மனிதர்களைக் காட்டிலும் மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் நாம் மட்டுமே என்பது புரியும். இந்த ஐ.பி.ஆர்.எஸ் விஷயத்திற்கு விரைவாக நீங்கள் முடிவெடுங்கள். சங்கத்திற்கும் உறுப்பினர்களுக்கும் என் வாழ்த்துக்கள்," என்றார் இளையராஜா.

இது ஒருபுறமிருக்க கடந்த ஆண்டு இளையராஜா அமெரிக்காவில் ஏழு இடங்களில் இசைச் சுற்றுப் பயணம் செய்ய முடிவு செய்து பாடகர்களைத் தேர்வு செய்தார். அப்போது எஸ்.பி.பாலசுரமணியன் அவர்களை அழைத்துப் பேசிய போது அவர் சம்பளமாக கேட்ட தொகை இளையராஜா தொண்ணூறுகளில் கூட தான் இசையமைத்த ஒரு படத்திற்கு வாங்காத பெரிய தொகையாக இருந்தது. ராஜா சார் தரப்பில் சிலர் பேசி பார்த்தும் பாலு அவர்கள் இறங்கி வரவில்லை. இதனால் மன வருத்தத்துடனே எந்த பிரபல பாடகர்களையும் உடன் அழைத்துச் செல்லாமல் வளர்ந்து வரும் பாடகர்களையே வைத்து ஏழு இடங்களில் வெற்றிகரமாக இசைக் கச்சேரியை நடத்தி முடித்து திரும்பினார்.

இதற்கு முன் எப்போதும் இப்படி காப்பிரைட் பிரச்சினை எழுந்ததில்லையே என்று பேஸ்புக்கில் எஸ்பிபி புலம்பியிருந்தார் அல்லவா... அதற்கான பதிலாகக் கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.

எஸ்.பி.பியைக் கொண்டாடுங்கள் தவறில்லை. ஆனால் உணமையை அறிந்து கொள்ளாமல் இசைஞானி மீது கல்லெறியாதீர்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Some people starting pelt stones on Maestro Ilaiyaraaja, even without onowing the facts behind SPB issue, Here is an analysis on this.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more