For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி

  |

  சென்னை: மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 88ஆவது பிறந்த நாள் நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மக்கள் ஜனாதிபதி என்று போற்றப்படும் அப்துல்கலாமின் பிறந்தநாள் சர்வதேச மாணவர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு கவிஞர் வைரபாரதி அப்துல் கலாம் பற்றிய கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

  Dr.APJ Abdul Kalam Birthday lyrics by Vaira bharathi #October15
  அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ்

  இன்னும் ரெண்டே ரெண்டு மாதம் தான் இருக்கிறது கலாம் சொன்ன வல்லரசு நாடாக இந்தியா ஒளிர்வதற்கு ...
  சீன அதிபர் வேறு நம் தேசத்திற்கே பல டிகேட்ஸ் கடந்து வந்து போயிருக்கிறார்...

  காலத்தின் சூசகமான ஸ்கிரீன் ப்ளே இது.

  ஒரு சூப்பர் பவராக நம் தேசம் மாறுவதற்கு அன்றே கனவு கண்டவர் நம் தானைத் தலைவர் அப்துல் கலாம்.

  அன்றே என்று நான் சொன்னது
  அவர் ஜனாதிபதியாகி நம்மை கனவு காணுங்கள் என்று சொன்னதிலிருந்து அல்ல...

  அவருடைய ராமேஸ்வர இளமை நாட்களிலிருந்தே அவர் நினைத்த அந்த வலிமையான எண்ணம் தான்...

  அரசு பள்ளியில் படித்தவர்.
  அரசைப் படித்தவர். அண்ணல் காந்தியின் அரிச்சுவடி படித்தவர். அறிவியல் படித்தவர். இத்தனை சிலபஸ் தாண்டி அடக்கம் படித்தவர் அதனால் தான் அவரை நாம் இன்னமும் படிக்கிறோம்.

  வறுமையின் காரணமாக இளம் வயதில் சைவம் உண்டவர்.
  சைவத்தின் மருத்துவ குணம் அறிந்து பிறகு சைவமாகவே நீடித்தவர்.

  இன்றைய ஐ.டி பிள்ளைகள் முதல் புள்ளீங்கோ வரை அவரிடம் படித்துத் தேற பல சப்ஜெக்ட் இருக்கிறது...

  முதலில் அவரைப் படிக்க வேண்டும். தேறி பாஸ் ஆவது அடுத்த கட்டம் தான்...

  அவருக்கு ஒரு பிடிப்பு இருந்தது .. அது அறிவியல்...
  அதைப் படிப்பாக்கினார்.

  அவர் பிரபலமாக வேண்டும் என்று ஆசைப்பட்டதே இல்லை...

  பாப்புலர் ஆக வேண்டும் என அவர் எதையும் செய்யவில்லை...

  அப்படிச் செய்திருந்தால் அவரின் இளம் வயதிலேயே உலகம் அவரை அறிந்திருக்கும்..

  கிரோட்டன்ஸ் சட்டென்று வளர்ந்திவிடும்..

  கொலு பொம்மையின் கடைசிப் படியில் ஒரு தோட்டம் அமைக்க நாம் போடும் கடுகு விதை முந்திரிக் கொட்டை போல் பக் என முளைவிட்டுவிடும்.

  கலாம் அவர்கள் குரோட்டன்ஸ் அல்ல ஆலமரம்...
  கடுகு அல்ல குடகு ...

  அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் வகுப்பு நிதானம்...

  போக்ரான் அணு ஆயுத வெற்றிச் சோதனை. காதும் காதும் வைத்தது போல் நிகழ்த்தினார்..

  பல வெளி நாடுகள் கலாம் அறிவை விலை பேசின...
  கொத்தவால்சாவடி காய்கறிகளாக அவர் ஏற்றுமதி ஆகவில்லை..

  காரணம்.. அவர் இந்தியாவை நேசித்தார்..

  அடுத்த பாடம் .. அவரின் புல்லரிக்க வைக்கும் தேச பக்தி ...

  என் நண்பன் அவனின் முதல் கவிதைத் தொகுதி வெளியிட்டான் அதை மிகத் துணிச்சலாக ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைத்தான்..

  ஒரு வாரத்தில் அவனுக்கு அப்துல் கலாமிடமிருந்து வாழ்த்துக் கடிதம் வந்தது... அவர் கையெழுத்தோடு...

  அடுத்த பாடம் அவரின் அணுகுமுறை ...

  ஒரே ஒரு திரைப்படம் ஓடினாலே தன்னை பிரம்மா என அலட்டிக் கொள்ளும் பக்குவமில்லாத அரவேக்காடுகள் (எல்லா துறையிலும்)
  மத்தியில்...
  ராக்கெட்டே விட்டவர் தன் தலையைக் குனிந்து கால்களை மண்ணில் பதித்தே கடைசி வரை நடந்தார்...

  அடுத்த பாடம் அவரின் எளிமை...

  அக்னிச் சிறகுகள் என்ற புத்தகம் வந்த பிறகே அனைவருக்கும் கலாமை பெரும்பான்மையாய் தெரியும் ...

  நல்ல எழுத்தாளர். எந்தக் கடவுளையும் வம்புக்கு இழுக்காத கவிஞர்.

  இந்தியா 2020 என்ற புத்தகக் கனவை விதைத்தவர்...

  அடுத்த பாடம் அவரின் தொலை நோக்குப் பார்வை...

  இன்றைய பிரிவினை அரசியல்வாதிகளின் ஸ்லிப்பர் ஷாட் திரு அப்துல் கலாம்...

  தன் அணுகுமுறையால்... செய்கையால்... சிந்தனையால்... அவர் இன்னும் சுயநலவாத அரசியலையும் ...
  பணப் பெருச்சாளி அரசியல்வாதிகளையும் செருப்பால் தான் அடித்துக் கொண்டிருக்கிறார்...

  அடுத்த பாடம் நேர்மை...

  நியூட்ரினோ திட்டம் மிக அவசியம் என சொன்னவரும் அவர் தான்...

  அடுத்த பாடம் அறிவியல் தெளிவு...

  தலை முடி ஸ்டைலை மாற்றிவிடும் படி ஜனாதிபதி ஆனவுடன் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது . அவர் மறுத்தார். கடைசி வரை அவர் அவராக இருந்தார்.

  அடுத்த பாடம் அடுத்தவரை புண்படுத்தாத நாம் நாமாக இருப்பது.

  வீணை இசைக் கலைஞரும் கூட அவர்.

  இலக்கியம் ரசிப்பவர்...
  வள்ளுவம் போற்றியவர்.

  குழந்தை மனசுக் கோமகன் அவர்.

  இந்திய மகான்களையும்.. பிற மதங்களையும் மதித்தார்...

  அவர்களிடம் ஆசிகளும் பெற்றார்.

  அடுத்த பாடம் சமத்துவம்...

  இளைஞர்களுக்கு இவரின் குணநலம் வந்துவிட்டால் ....

  இந்தியா வல்லரசு மட்டுமல்ல வழிகாட்டும் அரசாக உலகத்திற்கே மாறும்...

  ஏதோ ஒரு கிரகத்தின் முகவரி தெரியாமல் பூமிக்கு வந்து இறங்கிய ஏலியனாகத் தான் அப்துல் கலாம் இருக்க வேண்டும்.

  இல்லை என்றால் மணல் கடத்தல் ஊரில் மரம் நட்டவர் அவர்..
  இன்றும் நடிகர் விவேக் போன்றவர்கள் அதைத் தொடர பெரும் கிரியா ஊக்கியாக ஒரு பவர்ஃபுல் ஆன்மாவாய் செயல்படுகிறார் ...

  அத்தனை அறிவு... அத்தனை தெளிவு.. ஆனாலும் எத்தனை பணிவு.. இதுவே ஆன்மிகம்...

  ஆன்மிகமாகவே வாழ்ந்தவர்...

  திருமணம் செய்து உருப்படாத நான்கு குழந்தைகளைப் பெற்று மேலும் பல கிலோ பூமிக்கு பாரம் சேர்க்காமல் ...

  திருமணமே செய்து கொள்ளாததால் மாணவர்களையேப் பெற்றவர்..

  குடும்பத்தையே கட்சியாக்கும் திருநாட்டில் மாணவர்களையே தன் குடும்பமாக்கியவர்...

  எத்தனை மாணவர்களைச் சந்தித்திருக்கிறார்...

  அவர் பிறந்த தினத்தை மாணவர் தினமாக கொண்டாட வேண்டும்..

  காந்தி ஜெயந்தி போல் கலாம் ஜெயந்தி தேசியமயமாக்கப்பட வேண்டும்.

  ஒவ்வொரு பள்ளியிலும் அவர் பெயரில் ஒரு நூலகம் வேண்டும்...

  அவர் வாழ்க்கை திரைப்படமாக்கப்பட வேண்டும்... சமீபத்தில் வெளியான சைரா நரசிம்ம ரெட்டி படம் போல...

  அடுத்த பாடம் தாழ்வு மனப்பான்மை நீக்கி... ஒரே வலிமையான எண்ணத்தை வாழ்வாக்கி உயர்வது அதைத் தான் அவர் "கனவு காணுங்கள்" என்றார்...

  அதைத்தான் விவேகானந்தரும் அரைஸ் அவேக் .. ஸ்டாப் நாட் டில் த கோல் இஸ் ரீச்ட் என சொன்னார்...

  ஏதோ கணிப்பொறிப் பெட்டியை தடவினோம்.. சீட்டை தேய்த்தோம்.. சம்பாதித்தோம் .. கிளப் .. டிஸ்கோத்தே போனோம்.. பார்ட்டியில் சரக்கடித்தோம் ..‌ கடைசியில் நாறிப்போய் இறந்தோம் என்பதல்ல என்ஜாய்மென்ட் ...
  அதுவல்ல இன்டிரஸ்டிங் வாழ்க்கை...

  ஒரே ஒரு நாள் நீங்கள் அப்துல் கலாம் போன்ற லைஃப் ஸ்டைலை வாழ்ந்து பாருங்கள்...

  நீங்கள் அவரைப் போல் இந்த நொடிவரை சாகவே மாட்டீர்கள்...

  எல்லா பாடத்திலும் மிக முக்கியமான பாடம் அவரின் ஒழுக்கம்...புலன் அடக்கம்...

  மனசு தான் பாஸ் எல்லாமே .. அது நாய் மாறி.. வீட்டுக்குள்ளயே கட்டிப் போடணும்.. இல்லாட்டி கண்டவன் வண்டி மேல காலத் தூக்கி கல்லால அடிபட்டு நொண்டி நொண்டி ரத்தங் கக்கிச் சாகும்..

  கலாம் ஒரு அறிவு ஜோதி.. அதை ஏந்தி அனைவரும் இந்த நொடியிலிருந்து தன்னம்பிக்கை ஒலிம்பிக் உலா வருவோம்...

  இருட்டு இருட்டுனு கூவாதீங்க.. அந்த அறிவு ஜோதிய எடுத்து நாலு அடி நடப்போம்.. இருட்டு நம்மள விட்டு எட்டு அடி தள்ளி போகும் பாஸ்...

  அப்துல் கலாம் நம் மனசாட்சியை இன்னமும் கவனித்துக் கொண்டிருக்கும் உண்மையான பிக் பாஸ்

  மிகுந்த அக்கறையுடன்
  வைரபாரதி

  English summary
  Dr.APJ Abdul Kalam Birthday lyrics by Vaira bharathi #October15
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X