சிவகார்த்திகேயனின் டான் படத்தின் காப்பி தான் டிராகன் படமா?.. அஸ்வத் மாரிமுத்து கொடுத்த விளக்கம்!
சென்னை: இந்த மாதம் விடாமுயற்சி படத்துக்குப் பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்துக் கொண்டு வரும் படமாக தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் உள்ளிட்ட படங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநராக கோமாளி படத்தை இயக்கி வெற்றிப்பெற்ற பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக அறிமுகமான லவ் டுடே படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது.
அந்த படத்தின் இந்தி வெர்ஷன் கடந்த வாரம் வெளியான நிலையில், தமிழில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்துள்ள டிராகன் திரைப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதுவரை வெளியான டிராகன் படத்தின் வழித்துணையே உள்ளிட்ட பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், நேற்று வெளியான டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் அட அப்படியே சிவகார்த்திகேயனின் டான் படம் போல இருக்கே என்ன பாஸ் என கேட்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், அதற்கு பேட்டி ஒன்றில் அஸ்வத் மாரிமுத்து அழகான விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.
டிராகன் டைட்டில் ஏன்?: டிராகன் என படத்திற்கு டைட்டில் வைத்தது ஏன்? என்கிற கேள்விக்கு பதில் அளித்த அஸ்வத் மாரிமுத்து அதன் காரணத்தை படம் வெளியான 4வது நிமிடத்திலேயே சொல்லிவிடுவோம். அதுவரை சஸ்பென்ஸாகவும் சர்ப்ரைஸாகவும் இருக்கட்டும் என பதில் அளித்துள்ளார். டிரெய்லரில் அனுபமா பரமேஸ்வரனின் இடுப்பில் டிராகன் டாட்டூ இடம் பெற்றிருக்கும். பிரதீப் ரங்கநாதனுக்கு அந்த கல்லூரி மாணவர்கள் வைத்துள்ள பட்டப்பெயர் தான் டிராகனாக இருக்கும் என்றும் ரசிகர்கள் டீகோட் செய்து வருகின்றனர்.

டான் படத்தின் காப்பியா?: ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கெளதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் படத்தின் டிரெய்லரை பார்த்தவர்கள் அப்படியே டான் படம் போல இருக்கேப்பா என கேட்க ஆரம்பித்த நிலையில், அதற்கு பதிலளித்துள்ளார் அஸ்வத் மாரிமுத்து. இந்த படம் கண்டிப்பாக டான் படத்தின் காப்பி இல்லை என்றும் 2 வருஷத்துக்கு முன்னாடி நானும் டான் படம் பார்த்திருக்கேன். அந்த படத்தை மறுபடியும் எடுத்து வைக்க முடியுமா? டிரெய்லர் கட்ஸ் அப்படி இருக்கலாம். ஆனால், படம் பார்த்த பிறகு ரசிகர்கள் நிச்சயம் இப்படி சொல்ல மாட்டார்கள். ஓ மை கடவுளே படம் ஒரு ஃபேண்டஸி படம். ஆனால், இந்த படத்தின் கதைக்குள் ஒரு ஃபேண்டஸி இருக்கு எனக் கூறியுள்ளார்.

சிம்பு படமும் அப்படித்தான்: சிம்புவின் 51வது படமான காட் ஆஃப் லவ் படத்தையும் அடுத்து அஸ்வத் மாரிமுத்து தான் இயக்குகிறார். அந்த படமும் புதிய கதைதான் என்றும் நிச்சயம் அதிலும் ஃபேண்டஸி டச் நிறையவே இருக்கும். ரசிகர்களுக்கு பிடிக்கும் படங்களைத் தான் எப்போதுமே கொடுப்பேன். இந்த படத்தை பிரதீப் ரங்கநாதனுக்காகவோ, ஓ மை கடவுளே இயக்குநர் என்பதற்காகவோ எல்லாம் ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள். இந்த படம் நல்லா இருந்தாதான் ரசிகர்களுக்கு பிடித்தால் தான் பார்ப்பார்கள். அதை மனதில் வைத்தே படத்தை இயக்கியிருக்கிறேன். படத்தில் நடித்தவர்களும் பணியாற்றியவர்களும் அதற்காகவே உழைத்துள்ளனர் எனக் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications











