என்னை மன்னிச்சிடுங்க... முதல் முறையாக வெளியான புகைப்படம்...டிராகன் பட இயக்குநர் செய்ததை பாருங்க!
சென்னை: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியுள்ள டிராகன் திரைப்படத்திற்கு மாஸ் ஓபனிங் கிடைத்து வெற்றி நடை போடுகிறது. கடந்த வாரம் வெளியான இப்படம் இதுவரை 35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வெற்றிக்களிப்பில் இருக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது அப்பா, அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
48 அரியர்ஸ்: கெத்தான கல்லூரி வாழ்க்கை, காதல், பேராசிரியர்களை மதிக்காத தெனாவட்டு, பெற்றோரை ஏமாற்றும் பிழைப்பு என 48 அரியர்ஸ்களை வைத்திருந்தவன் தான் டிராகன். குறுக்கு வழியில் முன்னேற ஒரு ஃபிராடுத்தனம் செய்கிறான் டிராகன். அதுவே ஒருநாள், வாழ்வின் மொத்த சுகத்துக்கும் எமனாக வந்து நிற்கும் துயரம் என ஓர் இளைஞனின் வாழ்வியலை, இயல்பாகப் படமாக்கி உள்ளார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. 48 அரியர்ஸ் வைத்திருப்பது கெத்து என்றாலும் படிப்புதான் முக்கியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

வெற்றி கொடி கட்டு: ஓ மை கடவுளே படத்தின் வெற்றியை தொடர்ந்து டிராகன் படத்தை இயக்கியிருந்தார் அஸ்வத். 2வது படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இப்படம் ஒரு சீனியரின் கதை என அவரே தெரிவித்துள்ளார். பெற்றோர் சொன்னதை கேட்காமல் இன்ஜினியரிங் சேர்ந்தேன். பின்பு, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்றேன் என அவரே சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார். வெற்றி அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை. உண்மையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என அவரே தெரிவித்தார்.

தெலுங்கு, கன்னடத்தில் டிராகன்: டிராகன் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தெலுங்கு, கன்னட மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது மட்டும் இல்லாமல் தியேட்டர்களில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நடிகர் பிரதீப் ரசிகர்களை நேரடியாக சந்தித்து வெற்றியை கொண்டாடி வருகிறார். இது என் நண்பன் அஸ்வத் மாரிமுத்துவால் நிகழ்ந்தது என பிரதீப் தெரிவித்துள்ளார்.

சிம்புவுடன் 51வது படம்: ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு சிம்புவை இயக்க வேண்டியதாக இருந்தது. ஆனால், கொரோனா வந்து விட்டது. பின்னர், ஓ மை கடவுளே தெலுங்கு ரீமேக்கில் பிஸியாக இருந்துவிட்டேன். தற்போது எல்லாம் நினைத்தது போல் நடக்கிறது. சிம்புவை இயக்க போகிறேன் என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருப்பதாகவும் அஸ்வத் மாரிமுத்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார். சிம்புவின் 51ஆவது படத்துல ஒரு புது உலகம் இருக்கும். அது பேன்டஸி கதை. அவர் திறமையை வெளிப்படுத்தற மாதிரியான விஷயங்கள் அது இருக்கும் என அஸ்வத் கூறியுள்ளார். ரசிகர்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

பெற்றோரிடம் மன்னிப்பு: டிராகன் படம் வெளியான நாள் முதலே அஸ்வத் மாரிமுத்து குறித்த செய்திகள், பேட்டிகள் என மனம் நெகிழும் காட்சிகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது தாய், தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, நான் டாக்டராக வேண்டும் என்ற பெற்றோரின் கனவை நிறைவேற்ற முடியாமல் போனதற்காகவும், அடங்காத என்ஜினியரிங் மாணவனாக இருந்ததற்காகவும் பெற்றோரிடம் நான் கேட்கும் மன்னிப்புதான் டிராகன் படம் என தெரிவித்துள்ளார்.




Click it and Unblock the Notifications











