மேடையிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த நாடக நடிகர்... மரணக் காட்சியில் பரிதாபம்!
திருவனந்தபுரம்: மேடை நாடகத்தில், மரண காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது, மேடையிலேயே சுருண்டு விழுந்து நடிகர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
கடந்த புதனன்று இரவு கேரளா கலா அகாடமி ஆப் ஆர்ட்டிஸ் சார்பில் காயம்குளத்தில் உள்ள கே.பி.ஏ.சி. ஆடிட்டோரியத்தில், ‘பகவத சப்தஹம்' நாட்டிய நாடகத்தின் ஆறாம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில், ஆர்.சி.பிள்ளை என்கிற ராமச்சந்திரன் பிள்ளை (45) என்பவர் கோவிந்தன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, கோவிந்தன் கதாபாத்திரம் மரணமடைவது போன்ற காட்சி வந்தது. அதில் நடித்துக் கொண்டிருந்த போது, திடீரென நிஜமாகவே மயங்கி விழுந்தார் பிள்ளை.
உடனடியாக, பிள்ளையை நாடகக் குழுவினர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பிள்ளை, கொச்சி மெட்ரோ பணியில் காவலராக பணி புரிந்து வந்தார். இவருக்கு கிரிஜா என்ற மனைவி உள்ளார்.


Click it and Unblock the Notifications











