4 கதை ரெடியா இருக்கு.. ஹீரோவும் ரெடி.. பணம் தான் இல்ல.. வீடியோவில் புலம்பிய மோகன் ஜி !
சென்னை: பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்த மோகன் ஜி, பகாசூரன் படத்திற்கு பிறகு ஓராண்டாக சும்மாவே இருக்கிறேன், 4 கதை ரெடியா இருக்கு, ஹீரோவும் ரெடி, படம் எடுக்க பணம் தான் இல்லை என வீடியோவில் புலம்பி உள்ளார்.
பழைய வண்ணார்பேட்டை படத்தை இயக்கிய மோகன் ஜி, திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி இந்த படம் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், மற்றொருபுறம் விமர்சனங்களும் எழுந்த வண்ணம் இருக்கிறது.

இதையடுத்து ரிச்சர்ட் நடிப்பில் வெளிவந்த ருத்ரதாண்டவம் படமும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதையாக இருந்தது. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்தன. இவர் கடைசியாக செல்வராகவனை வைத்து பகாசூரன் படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் விமர்சனத்தை சந்தித்து. அதையடுத்து மோகன் தனது ட்விட்டரில், திரௌபதி 2? ருத்ரதாண்டவம் 2? என பதிவிட்டு இருந்தார்
திரௌபதி 2வா? ருத்ரதாண்டவம் 2 வா?: இதுகுறித்து மோகன் ஜி வெளியிட்டுள்ள வீடியோவில், எல்லாருக்கும் வணக்கம் நான் ட்விட்டரில் திரௌபதி 2 பண்ணலாமா ருத்ரதாண்டவம் 2 பண்ணலாமா என்று கேட்டு இருந்தேன். இதைப்பார்த்த பலர் திரௌபதி 2 பண்ணுங்க என்றார்கள். சிலர் புதுசா படம் எடுங்க என்றும் நான் வேணும்னா கதை தருகிறேன் என்று போட்டு இருந்தார்கள். ட்விட்டரில் ஒரே கதறலாக உள்ளது. திரௌபதி படத்திற்கும் ருத்ரதாண்டவத்திற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.
நான்கு கதை ரெடி: பகாசூரன் திரைப்படம் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரைக்கும் படம் பண்ணாமல் இருப்பதற்கு காரணம், இரண்டு கதையை யோசித்து வைத்து இருந்தேன் ஒன்று அரியலூரில் சிமெண்ட் பேக்டரியை சுற்றி உள்ள இரண்டு கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய கதையில் ஒரு பெரிய நடிகரை நடிக்க திட்டம் போட்டோம். அது தான் தாமதத்திற்கு காரணம். அடுத்து இரண்டாவதாக காசிமேட்டில் காசி விஸ்வநாதர் கோவில் மூழ்கிவிட்டதாக ஒரு கதை இருக்கு அது குறித்தும் ஆராய்ச்சி நடத்தி வருகிறோம்.
பணம் இல்லை: இப்படி நான்கு கதைகள் கைவசம் இருக்கு, இதற்கான ஹீரோக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், பிரச்சனை என்ன வென்றால் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. தேர்தல் முடியட்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த பிரச்சனையால் தான் படம் தாமதமாகிக் கொண்டு இருக்கிறது. இதனால் தான் திரௌபதி 2 படத்தை எடுத்தால் என்ன என்று தோன்றியதால் தான் அந்த பதிவை போட்டேன். அந்த பதிவினைப் பார்த்த அனைவர் இடத்தில் இருந்தும் நல்ல ஆதரவு வந்துள்ளது. மேலும், புதுசா கதை இருக்கா என்று கேட்டவர்களுக்கும், கதை இல்லையா என்று கேட்டவர்களுக்கும் இது பதிலாக இருக்கும் என்று மோகன் ஜி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











