கதையை அப்படி மாற்றி.. ஹாலிவுட் செல்கிறது சூப்பர் ஹிட் 'த்ரிஷயம்..' இயக்குனர் ஜீத்து ஜோசப் தகவல்!
கொச்சி: பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட த்ரிஷயம் படம் ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம், த்ரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார்.
மீனா, ஆஷா சரத், சித்திக், அன்ஷிபா ஹாசன் உட்பட பலர் நடித்தனர். 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த த்ரில்லர் படம், வசூலிலும் சாதனை படைத்தது.

கமல்ஹாசன்
இந்தப் படம், தமிழில் கமல்ஹாசன், கவுதமி, ஆஷா சரத், நிவேதா தாமஸ் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதையும் ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். ஜிப்ரான் இசை அமைத்திருந்த இந்த படம் தமிழிலும் ஹிட்டானது. இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக கமல்ஹாசன் நடித்து இருந்தார்.

சீனாவிலும் ரீமேக்
ஜிப்ரான் இசை அமைத்திருந்த இந்த படம் தமிழிலும் ஹிட்டானது. பின்னர் இந்தப் படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பிலும் கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடிப்பிலும், இந்தியில் அஜய்தேவ்கன் நடிப்பிலும் ரீமேக் ஆகி வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம், சீனாவிலும் ரீமேக்காகி சாதனைப் படைத்தது.

போலீஸ் அதிகாரி
அங்கு, ஷீப் வித்தவுட் அ ஷெப்பர்ட் என்ற பெயரில் உருவாகி ஹிட்டானது. தனது மூத்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் போலீஸ் அதிகாரி மகனை, மகளும், மனைவியும் கொல்கிறார்கள். அவன் உடலையும் கொலை செய்ததற்கான ஆதாரங்களையும் மறைத்து, இருவரையும் போலீஸ் பிடியில் இருந்து ஹீரோ காப்பாற்றுவது கதை.

ஓடிடியில் ரிலீஸ்
படம் ரிலீஸான நேரத்தில் இதன் அடுத்தப் பாகம் உருவாவது பற்றி கூறியிருந்தார் ஜீத்து ஜோசப். அதன்படி இதன் இரண்டாம் பாகம் த்ரிஷயம் 2 என்ற பெயரில் இப்போது உருவாகி இருக்கிறது. மோகன்லால், மீனாவுடன் முதல் பாகத்தில் நடித்தவர்கள் இதிலும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் அமேசான் பிரைமில் வரும் 19 ஆம் தேதி வெளியாகிறது.

ஹாலிவுட் ரீமேக்
இந்நிலையில், இந்தப் படம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆக இருப்பதாக இயக்குனர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஹாலிவுட்டில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் இந்தப் படத்தில் ரீமேக்கிற்காக என்னை அணுகினார். அவர் கேட்டுக்கொண்டபடி ஆங்கில ஸ்கிரிப்ட்டை அனுப்பி வைத்தேன்.

ஹிலாரி ஸ்வாங்
தடயங்களை மறைக்கும் வேலையை ஒரிஜினலில் ஹீரோ செய்வார். அங்கு ஹீரோயின் செய்வது போல ஸ்கிரிப்டை மாற்றி அனுப்பி இருக்கிறேன். ஒன்றரை மாதம் ஆகியும் இன்னும் பதில் இல்லை. அந்தப் படம் அங்கு நடந்தால், ஆஸ்கர் விருதுபெற்ற நடிகை ஹிலாரி ஸ்வாங் இதில் நடிப்பார்' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











