Vijayakanth - நம்ம பணம்டா போயிட்டு வா.. கார் டிரைவரை ஹெலிகாப்டரில் ஏற்றி அழகு பார்த்த விஜயகாந்த்
சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சூழலில் அவருக்கு பல வருடங்கள் டிரைவராக இருந்த வெங்கடேசன் என்பவர் விஜயகாந்த் குறித்து எமோஷனலாக பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
விஜயகாந்த் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாதவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வசதியான வாழ்க்கையையே வாழ்ந்திருக்கலாம். ஆனால் சினிமா ஆசை கொண்டு சென்னைக்கு வந்து ரொம்பவே கஷ்டப்பட்டவர். அவர் சென்னையில் இறங்கும்போது அவருக்கு இரண்டே துணைகள்தான். ஒன்று திறமை துணையாக இருந்தது; இரண்டாவது அவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் துணையாக இருந்தார். கரியரின் ஆரம்பத்தில் பல கஷ்டங்கள் பட்டு ஒருவழியாக ஹீரோவாகி மின்ன தொடங்கிவிட்டார்.

உதவும் குணம்: ஹீரோ ஆகிவிட்டால் பொதுவாக மற்றவர்களிடம் பழகுவதற்கு ஒரு வித தயக்கத்தை காட்டுவார்கள். ஆனால் விஜயகாந்த்தோ அப்படி இல்லை. ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு அடுத்ததாக பெரிய ஹீரோ என்றால் அது விஜயகாந்த்தான். அந்த நிலையில் இருந்தாலும் மற்றவர்களுடன் பழகுவதில் எந்த பந்தாவும் காண்பிக்காமல் ரொம்பவே எளிமையாக பழகினார். முக்கியமாக பலருக்கு பல உதவிகளை செய்தார்.
நட்சத்திரங்களுக்கும் உதவி: சாமானியர்களுக்கு மட்டுமின்றி இப்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், சூர்யா ஆகியோருக்கும் அவர்களது கரியரின் ஆரம்பத்தில் உதவி செய்தவர் விஜயகாந்த். அவர்கள் தவிர்த்து மன்சூர் அலிகான், போண்டா மணி, ஷாம் என அவர் உதவி செய்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். அதனை அனைவருமே நன்றியுடன் நினைவுகூர்ந்தார்கள்.
உடல்நலக்குறைவு: சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த அவர் எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஆனால் அரசியல் தளத்தில் அவருக்கு ஏற்பட்ட துரோகங்களும், சறுக்கல்களும் விஜயகாந்த்துக்கு மன உளைச்சலை கொடுத்தது. அதோடு உடல்நிலையும் சரியில்லாமல் போனது. அதனையடுத்து சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் ஆக்டிவ் அரசியலில் இருந்து விலகி முழு ஓய்வில் இருந்தார்.
உயிரிழப்பு: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. தமிழ்நாடெங்கிலும் இருந்து அவரது உடலுக்கு நேரில் வந்து பலர் அஞ்சலி செலுத்தினர். முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
வெங்கடேசன் பேட்டி: இந்நிலையில் விஜயாகந்த்துக்கு பல வருடங்களாக டிரைவராக இருந்த வெங்கடேசன் என்பவர் எமோஷனலாக விஜயகாந்த் குறித்து பல விஷயங்களை பேசியிருக்கிறார். தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “விஜயகாந்த் போல் யாராலும் இருக்க முடியாது. அவ்வளவு எளிமையாக பழகக்கூடியவர். பிரேமலதாவும் அவரை குழந்தைபோல்தான் பார்த்துக்கொண்டார்.
ஹெலிகாப்டரில் ரவுண்டு: ஒருமுறை கறுப்பு நிலா பட சமயத்தில் கோவாவுக்கு அவருடன் நானும் சென்றிருந்தேன். அப்போது ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்று எனக்கு ஆசை. விஜயகாந்த்திடம் சென்ற நான், அண்ணே எனக்கு ஹெலிகாப்டரில் ஒரு ரவுண்டு போகணும்னு ஆசை என்றேன். அதற்கு அவர், டேய் எரும நம்ம பணம்டா போய்ட்டு என்ஜாய் பண்ணு என்று சொல்லி ஹெலிகாப்டரில் ரவுண்டு அடிக்க வைத்து சந்தோஷப்பட்டார். இந்த மனசு எல்லாம் யாருக்கு வரும். அதேபோல் முதன்முதலாக என்னை லண்டன், துபாய், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு அழைத்து சென்றவரும் அவர்தான்” என்றார் எமோஷனலாக.


Click it and Unblock the Notifications











