ராதாவை ஏமாற்றிய பைசூல் ஒரு போதைப் பொருள் கடத்தல் ஆசாமி- முஸ்லிம் அமைப்பு புதிய புகார்
சென்னை: நடிகை ராதாவை ஏமாற்றிய தயாரிப்பாளர் பைசூல் ஒரு போதை பொருள் கடத்தல் ஆசாமி என்று புகார் தெரிவித்துள்ளார்.
6 ஆண்டுகள் தன்னை தாலி கட்டாத மனைவியாக அனுபவித்துவிட்டு, ரூ 50 லட்சம் பணத்தையும் ஏமாற்றிவிட்டார் என தொழிலதிபர் - தயாரிப்பாளர் பைசூல் மீது நடிகை ராதா கொடுத்த புகாரின் மீது விசாரணை நடந்து கொண்டுள்ள நிலையில், பைசூல் மீது புதிய புகார் எழுந்துள்ளது.

நடிகை ராதா புகார்
சுந்தரா டிராவல்ஸ் உள்பட நிறைய தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ராதா. இவர் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த, தொழில் அதிபர் பைசூல் மீது செக்ஸ் புகாரும், ரூ.50 லட்சம் பண மோசடி புகாரும் கொடுத்துள்ளார்.
அந்த மனு, சென்னை வடபழனி உதவி கமிஷனர் ஜெய்சுப்பிரமணியனிடம் விசாரணையில் உள்ளது. இந்த புகார் மனு தொடர்பாக தன்னை கைது செய்யாமல் இருக்க,தொழில் அதிபர் பைசூல், கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டுள்ளார். அந்த மனு விசாரணையில் இருக்கிறது.

இஸ்லாமிய அமைப்பு புதிய புகார்
இதற்கிடையில், தொழில் அதிபர் பைசூல் மீது, தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் என்ற அமைப்பு சார்பில், அதன் மாநில பொதுச்செயலாளர் அக்ரம்கான் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திடுக்கிடும் புதிய புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

போதைப் பொருள் கடத்தல்
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த அக்பர்பாஷா என்ற இளைஞரை, தைவான் நாட்டில் வேலை வாங்கித்தருவதாக அழைத்துச் சென்று, அங்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்க வைத்துவிட்டதாக, புதிய புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் நிறைய இளைஞர்கள், போதைப்பொருள் வழக்கில் மாட்டி வெளிநாட்டு சிறைகளில் தவிப்பதாகவும் புகார் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பைசூல் மறுப்பு
நடிகை ராதா கொடுத்துள்ள புகாரை, பொய் புகார் என்று, மறுத்துள்ள தொழில் அதிபர் பைசூல், இந்த புதிய புகாரையும் தவறான தகவல் என்றும், தனக்கும், அந்த புகாருக்கும் சம்பந்தம் இல்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











