Dude vs Bison Box Office: டிராகனை முந்தியதா டியூட்? பைசன் செய்த வசூல் வேட்டை..வின்னர் யாரு?
சென்னை: இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான 4 படங்களில் ஹரிஷ் கல்யாணின் டீசல் மற்றும் நட்டி நட்ராஜின் கம்பி கட்ன கதை உள்ளிட்ட 2 படங்களும் வசூல் அளவில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. பிரதீப் ரங்கநாதனின் டியூட் மற்றும் துருவ் விக்ரமின் பைசன் உள்ளிட்ட படங்கள் தான் வசூல் வேட்டை நடத்தின.
சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இதுவரை நடித்த படங்கள் எல்லாம் தன்னுடைய படங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு மாரி செல்வராஜின் படத்தின் மீது முழு நம்பிக்கை வைத்த நிலையில், அது கொஞ்சமும் வீண் போகாத அளவுக்கு பைசன் படத்துக்கு தமிழ்நாட்டு ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவை கொடுத்து ஹிட் ஆக்கியுள்ளனர்.

மாரி செல்வராஜ் படத்தை ரசிகர்கள் புறக்கணிப்பதாக கூறப்படும் தகவல்கள் எல்லாம் பொய் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் உணர்த்தி, நல்ல படங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு என்பதை நிரூபித்துள்ளனர்.
டிராகனை முந்தியதா டியூட் வசூல்?: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் 150 கோடி வரை பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அந்த படத்தை கொண்டாடினர். தீபாவளிக்கு வெளியான டியூட் திரைப்படம் 6 நாட்களில் 100 கோடி வசூல் செய்த நிலையில், அதன் பின்னர், அதன் வசூல் அப்படியே தேங்கி விட்டது. இதுவரை உலகளவில் ஒட்டுமொத்தமாக 113 கோடி வசூல் மட்டுமே டியூட் அள்ளியிருப்பதாக சாக்னிக் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியளவில் டியூட் திரைப்படம் 84 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது.
பைசன் வசூல் வேட்டை: தீபாவளிக்கு டியூட் படத்துடன் போட்டியாக வெளியான பைசன் - காளமாடன் திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுவரை ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 44.81 கோடி வசூல் செய்துள்ளதாகவும் உலகளவில் 60 கோடி வரை படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துருவ் விக்ரம் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே அடுத்த மாதம் டிசம்பர் 18ம் தேதி திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











