யதார்த்தமும் எலிவேஷனும்.. சிவகார்த்திகேயன் முதல் லெஜண்ட் சரவணன் வரை.. துரை செந்தில்குமாரின் ட்ரீட்மெண்ட்
சென்னை: சினிமா உலகில் கதாநாயகனாக மாறுவது என்பது பெரிய சவாலான காரியமல்ல, திறமை இருக்கிறதோ இல்லையோ பணம் இருந்தால் போதும் பெரிய ஸ்கிரீனில் படத்தை பார்த்து விட முடியும். ஆனால் மக்கள் அங்கீகரிக்கும் கதாநாயகனாக மாறுவது. அல்லது எந்த பின்புலமும் இல்லாத போது தன்னை கதாநாயகனாக தகவமைத்துக் கொள்வது என்பது எல்லாத் திரையுலகிலுமே சிரமமான ஒன்று தான். அதே நேரத்தில் இயக்குநர்கள் பார்வையில் அவர்களின் கதைக்கு இவர் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று எண்ணத்தை உருவாக்கி, அதன் மூலம் வெற்றி பெறும் நடிகர்களும் இருக்கிறார்கள்.
இந்த வரிசையில் இயக்குநர் துரை செந்தில்குமார் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகர்களை அடையாளம் காட்டும் இயக்குநராகவே இருந்து வருகிறார். அவரது முதல் படமான எதிர்நீச்சல் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக காட்டினார். சிவகார்த்திகேயன் அந்த படத்திற்கு முன்னர் கதாநாயகனாக நடித்திருந்தாலும், எதிர்நீச்சல் படம் சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் ஒரு சிறந்த எலிவேஷன் கொடுத்த படம். அதை அடுத்து வந்த காக்கி சட்டை படத்தின் ட்ரீட்மெண்ட் என்பது பாராட்ட வேண்டிய ஒன்று.
காரணம் சிவகார்த்திகேயன் போன்ற வளர்ந்து வரும் இளம் நடிகரை காவல்துறை அதிகாரியாக நடிக்க வைக்கும் போது, அவரை உயர் அதிகாரி கதாபாத்திரத்தை கொடுத்து, ரவுடிகளை போட்டு துவம்சம் செய்யும் திரைக்கதை அமைத்திருந்தால், படம் எடுபட்டிருக்குமா என்பது கேள்விக்குறி தான். ஆனால் சிவகார்த்திகேயனை கடைநிலை காவல் அதிகாரியாக நடிக்க வைத்தது மட்டுமல்லாமல், படம் முழுக்க காவல்துறை யூனிபார்ம் அணிய வைக்காமல், அதற்கேற்ற கதாபாத்திரத்தை வடிவமைத்தது அருமை. மேலும் கதாநாயகனாகவும் காமெடி செய்து கொண்டு இருந்த சிவகார்த்திகேயன் சண்டையும் செய்வார் என்று காட்டிய படம் காக்கி சட்டை. இந்த இரண்டுமே துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான படங்கள் தான்.

சூரி: அதன் பின்னர் நடிகர் சூரியை வைத்து கருடன் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் சூரி கதாநாயகன் தான் என்றாலும், நடிகர் சசிகுமார், உன்னி முகுந்தன் போன்ற கதாநாயகர்கள் இருந்தாலும், அவர்களுக்கு மத்தியில் சூரியின் கதாபாத்திரத்தை உலாவ விட்டு, அந்த கதாபாத்திரத்தை கதாநாயகனாகவும் கதையின் நாயகனாகவும் காட்டுவது என்ற சவாலான ட்ரீட்மெண்ட்டை கருடன் படத்தில் கையாண்டு அசத்தினார். குறிப்பாக உன்னி முகுந்தனிடம் வேலை பார்க்கும் ஒரு வேலையாள் கதாபாத்திரத்தை சூரிக்கு கொடுத்து அதன் மூலம் கதையை நகர்த்தி மெல்ல மெல்ல எலிவேஷன் கொடுத்து சூரி ஆக்ஷன் செய்தாலும் மக்கள் கைதட்டுவார்கள் என்று நிரூபித்துக் காட்டியவர். இதற்கு முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வெளியான விடுதலை பாகம் 1இலும் கருடன் படத்திற்கு பின்னர் வெளியான விடுதலை பாகம் இரண்டிலும் இணை இயக்குநராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை: இவரது இயக்கத்தில் வரும் லெஜண்ட் சரவணன் நடித்து உருவாகி உள்ள லீடர் படம் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் ஆக்ஷன் படம் தான் என்பதை உறுதி செய்யும் வகையில் இருக்கிறது என்றாலும், துரை செந்தில்குமார் மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கி உள்ளார். மேலும் லெஜண்ட் சரவணன் போன்ற வளர்ந்து வரும் கதாநாயகனுக்கு இந்த படம் அவரது கெரியரின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு கட்டாயம் உதவும் என்பதில் சந்தேகம் வேண்டாம் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளார். துரை செந்தில்குமார் கண்டெடுத்த மற்றொரு ஸ்டாராக லெஜண்ட் சரவணன் இருப்பாரா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











