தாடி வளர்த்த வயதான நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லை.. ரஜினிக்கு பதிலடி கொடுத்த துரைமுருகன்
சென்னை: அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.அதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பழைய மாணவர்கள் என்று பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சூழல் இப்படி இருக்க அதுகுறித்து அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் அளித்த பதில் ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க செய்திருக்கிறது.
இந்திய அளவில் பிரபலமான நடிகர் ரஜினிகாந்த். அவருக்கென்று பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். இப்போது அவர் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கியிருக்கிறார். அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படம் கண்டிப்பாக பெரிய சம்பவமாக செய்யும் என்று ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். வேட்டையன் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார் ரஜினி.

அரசியலில் ரஜினிகாந்த்: ரஜினிகாந்த்தை அவரது ரசிகர்கள் தலைவர் என்று அழைப்பார்கள். மேலும் அவர் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பல காலமாக கேட்டு பார்த்தார்கள். ரஜினியும் ஒருகட்டத்தில் தான் அரசியலுக்கு வருவேன். தனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்று கூறினார். இதன் காரணமாக அவரது ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கு சென்றனர். அதேசமயம் திராவிட பூமியில் ஆன்மீக அரசியலா என்று ரஜினிக்கு எதிர் தரப்பில் இருந்தவர்கள் பேசினார்கள்.
பின்வாங்கிய ரஜினி: எது எப்படியோ தங்களது தலைவர் அரசியலுக்கு வந்துவிட்டார் என்று ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தார்கள். ஆனால் அவர்களது மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. அரசியல் பிரவேசத்தை அறிவித்த கொஞ்ச காலத்திலேயே தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கூறினார். அதற்கு தன்னுடைய உடல்நிலையை காரணமாக காட்டினார் ரஜினி. இதனால் உச்சபட்ச அப்செட்டாகினார்கள் அவரது ரசிகர்கள்.
அரசியல் மேடையில் ரஜினி: அரசியலிலிருந்து ஒதுங்கினாலும் அவ்வப்போது அரசியல் மேடைகளில் ஏறிவருகிறார் ரஜினிகாந்த். அந்தவகையில் சமீபத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய ரஜினி, 'புது மாணவர்களை சமாளிப்பது சுலபம். ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பதுதான் கஷ்டம். இங்கு ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கிறார். அவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை. அசாத்தியமானவர்கள்.
அதிலும் துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் கலைஞர் கருணாநிதி கண்களிலேயே விரலை விட்டு ஆட்டியவர். அவரிடம் எதையாவது கேட்டால் அவர் சந்தோஷம் என்று சொல்வார். அந்த சந்தோஷம் என்ற வார்த்தையை நல்ல விதமாக சொல்கிறாரா இல்லை வேறு விதமாக சொல்கிறாரா என்பதை புரிந்துகொள்ள முடியாது' என்று பேசியிருந்தார்.
துரைமுருகன் பதிலடி: ரஜினிகாந்த்தின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது மூத்த அமைச்சர்களை அவர் எப்படி அப்படி சொல்லலாம் என்று திமுகவினர் பேச ஆரம்பித்தனர். இந்நிலையில் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் ரஜினி பேசியது குறித்து கேட்டபோது, 'அதேதான் நானும் சொல்றேன். மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி, தாடி வளர்த்து சாகுற நிலையில் நடித்துக்கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லை' என்று கூறினார். அவரது இந்தப் பேச்சு ரஜினி ரசிகர்களை கொந்தளிப்படைய செய்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











