ரியல் எஸ்டேட் மோசடி.. கணக்கில் வராத பணம்.. மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்..பின்னணி என்ன?
ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, 27ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதன் பின்னணியில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
ஐதராபாத்தில் உள்ள சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், ஒரே இடத்தை காட்டி பல பேரிடம் விற்றுவிட்டதாகவும், மேலும் தகுதி இல்லாத, ஒப்புதல் வாங்காத வீடுகளை விற்று கோடிக்கணக்கில் மோசடி செய்துவிட்டதாக 2 நிறுவனங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்ததைத் தொடர்ந்து, சுரானா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் நரேந்திர சுரானா மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சதீஷ் சந்திர குப்தா மீது தெலுங்கானா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை பணமோசடி விசாரணையைத் தொடங்கியது.

அமலாக்கத்துறை சோதனை: இதைத்தொடர்ந்து, 16ஆம் தேதி அந்த இரண்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதில் ஆவணங்கள், பணம் தொடர்பான ஆதாரங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர். இதில் ரூ.100 கோடி கணக்கில் வராத பரிவர்த்தனைகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த மோசடி செய்த பணம் விளம்பர மற்றும் கட்சிகளுக்கு திருப்பி விடப்பட்டதை அமலாக்கத்துறை உறுதிப்படுத்தியதை அடுத்து, மோசடி பணத்தில் இருந்து பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்தது.
கணக்கில் வராத பணம்: இந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரத்தில் மகேஷ் பாபு நடித்துள்ளார். இதன் மூலம் அவர் பலரை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யத் தூண்டியதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடியில் மகேஷ்பாபு ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்றாலும், அந்த நிறுவனங்களிடம் இருந்து விளம்பரத்தில் நடித்ததற்காக 5 கோடியே 90 லட்சத்தை சம்பளமாக பெற்றுள்ளார். அந்த தொகையில் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் செக்காகவும், 2 கோடி 50 லட்சம் ரூபாயை ரொக்கமாகவும் மகேஷ்பாபு பெற்றுள்ளதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டின் பேரில் இம்மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











