twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமாவுக்கு விருது வழங்கியவரே கருணாநிதிதானே! - படத்தொகுப்பாளர் லெனின்

    By Shankar
    |

    சென்னை: தமிழ் சினிமாவுக்கு விருது வழங்கியவரே கருணாநிதிதானே. இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் அவரை புறக்கணிக்கலாமா, என கேள்வி எழுப்பியுள்ளார் சினிமா எடிட்டர் லெனின்.

    இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் சென்னையில் நடக்கின்றன. இது தமிழக அரசும் பிலிம்சேம்பரும் இணைந்து நடத்தும் விழா. முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார். இறுதி நாளில் தென் மாநில முதல்வர்கள் நான்கு பேரும், இந்திய குடியரசுத் தலைவரும் பங்கேற்கிறார்கள்.

    நாடே உற்று நோக்கும் ஒரு பிரமாண்ட சினிமா விழாவில், அந்த திரைத் துறைக்கு பெரும் பங்காற்றிய திமுக தலைவரும் தமிழ் சினிமாவின் மூத்த எழுத்தாளரும், 75 படங்களுக்கு மேல் எழுதியவருமாந கருணாநிதி முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து எடிட்டர் லெனின் தன் ஆதங்கத்தை ஒரு கடிதமாக எழுதியுள்ளார்.

    Editor Lenin condemns for avoiding Karunanidhi in Cinema 100 event

    அந்தக் கடிதத்தின் ஒரு பகுதி:

    இந்திய சினிமா நூறு ஆண்டை கடந்திருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிற செய்தியாக இருந்தாலும், இந்த நூறு ஆண்டுகளில் இந்திய சமூகம், குறிப்பாக தமிழ் சமூகம் கொஞ்சம் கூட சினிமாவை புரிந்துக் கொள்ளவில்லையே என்கிற ஆதங்கமும் இருக்கவே செய்கிறது. சினிமா எடுப்பவர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்? சினிமாவில் நடிப்பவர்கள், இயக்குபவர்கள் உள்ளிட்ட வெகு சில கலைஞர்கள் மட்டுமே பொருளாதார ரீதியில் வளர்ந்துக் கொண்டே இருக்கிறார்கள். போகட்டும். பிரச்சனை அதுவல்ல இப்போது.

    இந்த நூற்றாண்டு கால சினிமாவை நாம் ஏன் கொண்டாட வேண்டும். சமூகத்திற்கு இதுவரை கொஞ்சமும் பயன்படாத வகையில்தான் இந்தியாவில் சினிமா உருவாகி கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், சமூகத்தை சீரழிப்பதிலும் சினிமா முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கிறது. பல கொலைகளை செய்த ஒருவன், குறிப்பிட்ட சினிமாவின் பெயரை சொல்லி இந்த படத்தை பார்த்துதான் நான் கொலை செய்தேன், இந்த படமே என்னை இப்படி கொலை செய்யத் தூண்டியது என்று அறிக்கை விட்ட சங்கதியெல்லாம் நடந்த நாடுதானே இது.

    யாருடைய பணம்...

    தமிழக அரசு இப்போது, இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாட பத்து கோடி ரூபாயை கொடுத்திருக்கிறது. இது யாருடைய பணம்? படிப்புக்க வசதியின்றி, அடிப்படை வசதிகள் கூட இல்லாத எத்தனையோ கிராமங்களில் உள்ள மக்களுக்கு, அல்லது மக்களின் சுகாதார மேம்பாட்டிற்கு, ஒரு நகர, கிராமத்தின் உட்புற கட்டமைப்புக்கு இந்த பணத்தை செலவிட்டு இருக்கலாம். சினிமாவில் இருப்பவர்களுக்கு பணத்திற்கு என்ன பிரச்சனை? சினிமாவின் மூலம் கோடிகள் சம்பாதித்தவர்கள், சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள், இதற்கான செலவை பகிர்ந்துக் கொண்டால் என்ன? மக்களின் வரிப் பணத்தை, ஏதோ சிலரின் கேளிக்கைக்காக அரசு இப்படி வாரி வழங்குவது எந்த வகையில் நியாயம்.

    சரி, இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடுவது என்று முடிவெடுத்துவிட்டப் பின்னர் அதை எப்படி உருப்படியாக கொண்டாடுவதே என்றாவது சிந்தித்தார்களா ?

    தொடர்ச்சியாக சென்னை முழுவதும் திரையிடப்படும் படங்களில் எல்லாமும், சினிமாவின் உன்னதத்தை, தமிழர்களின் பண்பாட்டை எந்தவிதத்திலும் பிரதிபலிக்காத, வெறும் கேளிக்கையை கொண்டாடும் படங்கள். இந்த படங்களை திரையிட்டு, நாம் எப்படி நூறு வருடத்தை கொண்டாடுவது. இப்படியான படங்கள்தான் இந்த நூறு வருடத்தில் வந்திருக்கிறது என்றால், நாம் கூச்சப்பட வேண்டாமா என்று நான் கேட்கவில்லை? ஆனால் உண்மையாகவே தற்போது திரையிடப்படும் இந்தப் படங்களையும் தாண்டி, தமிழ் சினிமாவில் நூற்றுக் கணக்கான அற்புதமான படங்களும் வெளிவந்திருக்கின்றன.

    எல்லீஸ் ஆர் டங்கன்

    அமெரிக்காவில் இருந்து கேமராவின் பாகங்களை விற்க வந்த எல்லிஸ். ஆர். டங்கன் தமிழ் திரைப்படங்களுக்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுத்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்களின் படங்களை திரையிடுவதை ஆதரிக்கும் வேளையில், சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர், பியு சின்னப்பா போன்றவர்களை நாம மறந்ததையும் நான் இந்த நேரத்தில் நினைவுப் படுத்த விரும்புகிறேன்.

    எம்.ஜி.ஆர் படத்தை திரையிட முனையும்போது, தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றியமைத்த எல்லிஸ். ஆர். டங்கன் இயக்கிய மந்திரிகுமாரி திரைப்படத்தையாவது திரையிட்டு இருக்கலாமே. அல்லது நாவலில் இருந்து சினிமாவாக மலர்ந்து மலைக்கள்ளனை பரிசீலித்து இருக்கலாமே. ஏன் இந்த படங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. கலைஞர் இந்த படங்களில் பங்காற்றி இருப்பதாலா?

    கே ராம்நாத்

    வெறும் நடிகர்களை கொண்டாடுவது மட்டுமல்ல, நூற்றாண்டுக் கொண்டாட்டம். இந்த நூற்றாண்டை சினிமா கடந்து வர முக்கிய காரணம், சினிமாவில் ஆளுமை செலுத்திய இயக்குனர்கள். அதில் முக்கியமானவர் கே. ராம்நாத். ஒரு வெளிநாட்டு இலக்கியத்தை தமிழில் "ஏழை படும் பாடு" என்கிற திரைப்பாமாக எடுத்தார். இன்று வரை தமிழில் அப்படியான திரைப்பட முயற்சி உருவாகவே இல்லை. ராம்நாத்தின் ஏதாவது ஒரு திரைப்படத்தை திரையிடுவதில் இங்கே என்ன பிரச்சனை இருக்கிறது?

    வெறும் பாடல்களால் நிறைந்த தமிழ் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு பாடல்களே இல்லமால், ஜப்பானிய சினிமா பாணியில் வீணை எஸ். பாலசந்தர் இயக்கிய "அந்த நாள்" திரைப்படம் எத்தனை முக்கியமான திரைப்படம். ஒரு பொம்மையை வைத்து முற்றிலும் வித்தியாசமான காலத்தில் அவர் இயக்கிய பொம்மை திரைப்படத்தையாவது திரையிட்டு இருக்கலாமே. டி.ஆர். ரகுநாத் இயக்கிய திரைப்படங்கள், பி.ஆர்.பந்துலுவின் முக்கியமான படமும், தமிழர்களின் சுதந்திரப் போராட்ட பங்கை விளக்கும் ஒரு வீரனின் கதையுமான "கப்பலோட்டிய தமிழன்" திரைப்படம் எல்லாம் எங்கே போனது.

    சாதனை கதாநாயகிகள்

    ஒரு தெலுங்கு நடிகை சிவாஜிக்கு சமமாக வசனம் பேசி நடித்த, கண்ணகி திரைப்படம் ஏன் காணாமல் போனது. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகாமணி என்று மிக நீளமான தலைப்பில் வெளிவந்த திரைப்படமெல்லாம் என்ன ஆனது? தவிர முதல் சகலகலா வல்லியான பானுமதியின் சண்டிராணி படம் என்ன ஆயிற்று. டி.ஆர். ராஜகுமாரி, டி. எ. மதுரம், ஜீவரத்தினம் இன்னும் பல திறமையான நடிகைகளை இந்த தமிழ் சினிமா எப்போது நினைவுக்கூறப் போகிறது என்று எனக்கு தெரியவில்லை.

    கருணாநிதியின் பங்களிப்பு

    ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்,கலைஞர் கருணாநிதி தமிழ் சினிமாவிற்கு அளித்த பங்கை யாராவது மறந்துவிட முடியுமா? இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அவரவர் மொழிப் படங்களுக்கு மாநில விருது வழங்கப்பட்டிருக் கொண்டிருந்த சமயத்தில், தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்காக மாநில விருது வழங்கப்படவே இல்லை. அதை கருணாநிதிதான் தொடங்கிவைத்தார். நான், பாலு மகேந்திர உள்ளிட்டவர்கள், விருதுத் தொகையை அதிகரித்துக் கொடுக்க சொன்னபோது அதை உடனே அதிகரித்து கொடுக்கவும் செய்தார்.

    தவிர, உலகில் இந்த வயதிலும் பேனா பிடித்து எழுதும், அதுவும் யார் கேட்டாலும் சினிமா என்றால், தன்னை மறந்து அதில் மூழ்கிப் போகும், ஒரு கலைஞன் இந்த சினிமாவிற்கு அளித்த கொடையை ஏன் தமிழ் சினிமா மறந்துப் போனது.

    சிவாஜி கணேசன் என்கிற ஆளுமையை அடையாளம் காண வைத்து, தமிழர்களின் பகுத்தறிவை உசுப்பிவிட்ட, திராவிட இயக்கத்தின் தொடக்க கால காவியமான "பராசக்தி", திரைப்படம் எங்கே போனது? வீர வசனங்களுக்கு பேர்போன கண்ணாம்பாளை நிலைநிறுத்திய "மனோகரா" என்ன ஆனது. கலைஞரின் எத்தனையோ படங்களில் எதையாவது ஒன்றையாவது திரையிட்டு இருக்கலாம்.

    அரசியலுக்கு அப்பாற்பட்டு, தொடர்ந்து இந்த வயதிலும், திரைத் துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கலைஞனாகவாவது கருணாநிதியை இந்த தமிழ் திரையுலகம் கொண்டாடியிருக்கலாம். கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, அவரை கொண்டாடிய கூட்டம் ஏன் இதைப் பற்றி பேசவில்லை.

    கலைஞரின் மூலமே சினிமாவில் பெரிய இடத்தைப் பிடித்த வித்தக கவிஞர் என்கிற பா.விஜய் இந்நேரம் எங்கே போனார்?

    அப்துல் ரகுமான், வைரமுத்து, என்று ஒரு பெரிய பட்டாளமே கலைஞரால்தான் இங்கே நிலையான இடத்தை அடைந்தது. கலைஞரின் படத்தை திரையிடாதது கண்டு ஏன் இவர்கள் வெகுண்டெழவில்லை என்று நான் கேட்கவில்லை!!

    இந்த சினிமாக்காரர்கள் அழைக்காவிட்டாலும், ஒரு தயாரிப்பாளராக, வசனகர்த்தாவாக, பாடல் ஆசிரியராக இந்திய சினிமாவின் இந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ளும், எல்லா உரிமையும், தகுதியும் கலைஞர் கருணாநிதிக்கு இருக்கிறது. நிச்சயம் கலைஞர் இந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டு தமிழ் திரையுலகின் முகத்திரையை கிழிக்க வேண்டும். என்று நான் கேட்கவில்லை!!

    அறிஞர் அண்ணா

    கலைஞரைத் தாண்டியும், திராவிட இயக்கத்தின் ஆணிவேர் அறிஞர் அண்ணாவின் படங்கள் என்ன ஆனது? நல்லதம்பி படம் பற்றி இங்கே யாருக்காவது தெரியுமா? பகுத்தறிவை வளர்த்ததாக சொல்லப்படும் அண்ணாவின் படங்களுக்கே இந்த நிலையா? எனில் அண்ணா நாமம் எங்கே வாழ்வது? இன்னொரு முக்கியமான கலைஞனான வீ.கே ராமசாமி டி.ஆர்.மகாலிங்கம் எங்கே போனார்கள்? ஏன் தமிழ் சினிமா சரித்திரம் மறந்துபோனது? ரத்தினக் குமார் என்கிற படம் பற்றிய குறிப்புகளாவது இங்கே இருக்கிறதா? என்று நான் உங்களை கேட்கவில்லை. எனக்குள்ளேயே யோசித்துப் பார்க்கிறேன்.

    தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, உடனடியாக தமிழ் சினிமா பற்றிய ஒரு கண்காட்சியை ஏற்பாடு செய்ய வேண்டும். மறக்கப்பட்ட எல்லா கலைஞர்களையும் (நடிகர்கள், இயக்குனர்கள், லைட்மேன், மேக்அப் மென் உட்பட) மீண்டும் மக்களுக்கு நினைவுப்படுத்த அவர்களுக்கு தனியாக ஒரு விழா நடத்த வேண்டும்.

    தமிழ்,மலையாளம்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கில மொழி சினிமாவின் படங்களை படத்தொகுப்பு செய்தவன், தமிழுக்கு நான்கு முறை தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தவன் என்கிறதால். இதை நான் எழுதவில்லை. ஒரு சாதாரண பார்வையாளனாக, சினிமாவை நேசிக்கும் ஒரு ஆர்வலனாக இதை கேட்கிறேன். இந்த கலைஞர்கள், இயக்குனர்கள் எல்லாம் இல்லையென்றால் இந்திய சினிமாவுக்கு நூற்றாண்டு இல்லை, எனவே அவர்களை இந்த தருணத்திலாவது நாம் ஒருமுறை நினைவு கூர்வோம்.

    English summary
    Here is few excerpts of Editor Lenin's long letter on Indian Cinema 100 celebrations.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X