twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெத்தப் படித்த மூடர்கள்!

    By Shankar
    |

    -எஸ் ஷங்கர்

    எழுபதுகள் வரை கல்வியின்மை, அறியாமை மிகுந்த நாடு இது. மெல்ல கல்வி கற்கும் ஆர்வம் வந்தது. இந்தத் தலைமுறையில் பெரும்பாலும் கல்வியறிவு பெற்றவர்கள்தான்... அதாவது எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள்.

    ஆனால் கல்வியறிவு என்பது வெறும் அனா ஆவன்னாவைத் தெரிந்து கொள்வது மட்டுமா... கட்டுக்கட்டாகப் புத்தகங்களை, பக்கம் பக்கமாக இணைய வெளியை மேய்வது மட்டும்தான் என்றால்... இன்றைக்கு உள்ளவர்களில் பெரும்பாலானோர் கல்வி கற்ற மூடர்கள் என்று தாராளமாகச் சொல்லலாம்.

    Educated Illiterates spit venom on a Maestro

    கல்விக் கண் தந்த பெருந்தலைவர் பள்ளிப்படிப்பைக் கூடத் தாண்டாதவர். ஆனால் அவரைப் போன்ற அறிவாளி, மேதை எவருமில்லை. எம்ஜிஆர் படிக்காதவர்தான். ஆனால் அவருக்கு இணையான பண்பானவர், மனிதநேயமிக்கவர், எல்லாம் அறிந்தவர் யாருமில்லை.

    கற்றதனால் ஆன பயன் அவனுக்கு பகுத்தறிந்து சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். கண்மூடித்தனமாக எழுதவோ பேசவோ கூடாது.

    இளையராஜா விஷயத்தில் நேற்றும் இன்றும் இணைய வெளியில், பொது வெளியில் கண்மூடித்தனமாக எழுதும், பேசும், விவாதிக்கும் பலரையும் பார்க்கும்போது ஒரு விஷயம் நன்றாகத் தெரிந்தது. இந்த நாட்டில் படிக்காதவர்களை விட, எழுதப்படிக்கத் தெரிந்த மூடர்கள் ரொம்ப ரொம்ப அதிகம்! இந்த அளவுகோலை மட்டும் வைத்துப் பார்த்தால் கல்லாமைமையின் அளவு சர்வ நிச்சயமாக 90 சதவீத்தைத் தொடும்.

    Educated Illiterates spit venom on a Maestro

    எத்தனை சிறுமையான படித்தவர்கள்... இளையராஜா ஒரு விஷயத்தை நான்கு சுவர்களுக்குள் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். அதுவும் 100 சதவீதம் அவர் பக்கம் நியாயமிருக்கும் விஷயம். அவருக்கு உரிமையுள்ள விஷயம். ஆனால் அந்த நியாயத்தை ஏற்க மனமில்லாத எஸ்பிபி, திட்டமிட்டு அதை பொதுவெளிக்குக் கொண்டு வந்து ரசிகர்களை மோத விடுகிறார். மோதலின் வீர்யம், தீவிரத்தை பேஸ்புக்கில் பார்த்து ரசித்து, ஒரு 24 மணி நேரம் கழித்து, 'போதும் போதும்' என வேண்டுகோள் வைக்கிறார்.

    ஒரு வணிக கச்சேரியில், அதுவும் இளையராஜா இல்லாத மேடையில், அவர் பாடல்களைப் பாட அனுமதி கேட்டுப் பெற வேண்டும் என்ற அறிவு இல்லாதவரா எஸ்பிபி? அதுவும் பிற இசையமைப்பாளர்களிடம் அனுமதி கேட்டுப் பெறுபவருக்கு ராஜாவிடம் கேட்கத் தெரியாதா? கேட்டிருந்தால் மறுத்திருக்கவா போகிறார்? ஆனால் காப்பிரைட் நோட்டீசை விவகாரமாக்கி ரசிகர்களுக்குள் மோதல் உருவாக்குகிறார்.

    சரி, இது இரண்டு ஜாம்பவான்களின் பிரச்சினை... அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற சின்ன யோசனை கூட இல்லாமல், விவாதம் என்ற பெயரில் இஷ்டத்துக்கும் விஷம் கக்கிக் கொண்டிருக்கும் 'கல்லாமைகளை' என்ன செய்வது?

    இந்த விவாதம் தொடங்கிய அடுத்த நொடி ஒரு 'கல்லாமை' ராஜாவின் ஜாதி வேரைத் தேடுகிறது... பல கல்லாமைகள் அதற்கு ஒத்து ஊதுகின்றன. பண ஆசையைாம், தலை கனமாம், எல்லாம் தயாரிப்பாளர்களுக்கே சொந்தமாம்... யேய் யேய்... ஒருவரைப் பற்றி ஒன்றும் தெரியாமலேயே எப்படி இப்படியல்லாம் எழுத, பேச முடிகிறது உங்களால்!

    இளையராஜா படிக்காதவர். ஆனால் மனிதாபிமானத்தில் டாக்டரேட்டுக்கும் மேலான பட்டமிருந்தாலும் அவருக்குத் தரலாம். தன் இசைக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்களுக்கு மட்டும் ஊதியம் பெற்றுக் கொடுத்துவிட்டு, தன் இசைக்கான ஊதியத்தை அவர் பெறாமலேயே வந்துவிட்ட பல படங்களைப் பட்டியலிட முடியும். கதை, காட்சிகள் பிடித்துப் போனால், 'சரி நான் பாத்துகிறேன் போய்யா' என்று கூறி தயாரிப்பாளரை, இயக்குநரை அவர் ஆறுதல்படுத்தி அனுப்பிய கதைகள் கோடம்பாக்கமெங்கும் நிறைய உண்டு.

    அவர் கோபக்காரர். தன் பக்க நியாயம், அடுத்தவர் தவறுக்காக கோபப்பட்டிருப்பார். தன்னிடம் அந்த ஒரு விஷயம் வந்து சேர்ந்த விதத்தில் கோபப்பட்டு, பின் சமாதானமாகியிருப்பார். கர்வக்காரர்தான். தன் அசாதாரணமான இசை, திறமை மீதான நம்பிக்கையின் வெளிப்பாடு அது. அதனால் உனக்கென்ன பாதிப்பு? பணத்தாசை என்கிறார்கள்... அவருக்கு கதை சொல்லி, சம்பளம் பேசப்போன எத்தனையோ இயக்குநர்கள், குறிப்பாக புதியவர்கள் இருப்பார்கள். கேட்டுப் பாருங்கள்... அவர் எந்த அளவுக்கு சம்பள விஷயத்தில் நீக்குப் போக்காக நடந்து கொள்பவர் என்று‍!

    Educated Illiterates spit venom on a Maestro

    எம்எஸ்வி மறைந்த பிறகு ஒரு கச்சேரி நடத்தி, பெரும் பணம் வசூலித்து, அதை அப்படியே எம்எஸ்வி மகள்களிடம் ஒப்படைத்த அந்த மனிதரா பணத்தாசைப் பிடித்தவர்?

    இந்த சமூகம் மீது அவரை விட அக்கறை கொண்ட வேறு இசைக் கலைஞரை சொல்ல முடியுமா... சென்னை வெள்ளத்தை விடுங்கள்... சமீபத்தில் மெரீனாவில் திரண்ட இளைஞர்களைப் பார்த்ததும் கண்கள் மின்ன அவர் வெளிப்படுத்திய மகிழ்ச்சியும், 'என் மக்கள் மாற்றத்துக்குத் தயாராகிவிட்டார்கள்' என்ற அவரது ஆத்மார்த்தமான உணர்வையும் பார்த்தவர்கள்தானே நீங்களெல்லாம்... எப்படி இப்படி மனம்போன போக்கில் எழுத, பேச முடிகிறது!

    எழுதப் படிக்கத் தெரிந்து கொண்ட இந்த இணைய வெளி 'கல்லாமைகள்', எப்போது அறிவைப் பயன்படுத்த கற்கப் போகிறார்கள்?

    (@Vino Jasan)

    English summary
    Most of the guys those expressing negative opinion on Maestro Ilaiyaraaja in social media seems like educated illiterates with out knowing anything in this issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X