முடக்கு வாதத்தால் முடங்கிப்போன வாழ்க்கை.. ஈசன் பட பாடகியின் பரிதாப நிலை!
சென்னை: ஈசன் படத்தில் வரும் 'ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீ கேளையா' பாடலை பாடி அனைவரையும் ஆட்டம் போட வைத்தவர் தஞ்சை செல்வி. தற்போது இவர் முடக்கு வாதத்தால் முடங்கிப்போய், அடுத்து வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் மருத்துவ உதவியை கேட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தெட்சிணாபுரத்தில் வசித்து வரும் பாடகி செல்வி, சசிகுமார் இயக்கத்தில் உருவான ஈசன் படத்தில் 'ஜில்லா விட்டு ஜில்லா வந்து' பாடலை பாடி திரையுலகத்திற்கு அறிமுகம் ஆனார். அந்த பாடலில் அவரின் கனீர் குரல் அனைவரையும் ஆட்டம் போட வைத்து, அந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அதைத் தொடர்ந்து, 60க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை பாடி இருக்கிறார் செல்வி.

ஈசன் பட பாடகி: கிராமத்து மண்வாசனை மாறாமல், அனைவரையும் ஆட்டம் போடவைக்கும் செல்வியின் பாடல்கள். இந்தியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாடு வரையும் சென்று பாடல்களை பாடி இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று பாடல்களை பாடி பிரபலமானார்.
துயரமான வாழ்க்கை: கொரோனாவிற்கு முன்பு வரை படு பிஸியாக அனைத்து பாடல்களையும் பாடி வந்த, தஞ்சை செல்விக்கு கொரோனாவுக்கு பின் வாழ்க்கையே மாறிப்போனது தான் துயரம். கொரோனா காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்பு சரியாக வராததால், வருமானம் குறைந்து போய் வட்டிக்கு மேல் வட்டி வாங்கி வாழ்க்கையை நகர்த்தி உள்ளார் பாடகி செல்வி. வாழ்வதற்காக கஷ்டப்பட்டு வந்த செல்வி, தற்போது முடக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வருகிறார். மருத்துவ செலவிற்கு கூட காசு இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் செல்வி, தற்போது மருத்துவ செலவிற்கு உதவி செய்தால், முடக்குவாதத்தில் இருந்து மீண்டு பாடல்களை பாடுவேன் என உதவி கேட்டுள்ளார். மேலும், எங்களை போன்ற கலைஞர்களுக்கு என்று நிரந்தர வருமானம் வருமாறு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மருத்துவ உதவி: ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த செல்வி சினிமாவில் பாடுவதற்கு உதவியது நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் தானாம். அவர் தான் சசிகுமாரிடம் அழைத்து சென்று பாட வைத்து செல்விக்கு ஜில்லா விட்டு ஜில்லா பாட்டை பாட வாய்ப்பு வாங்கி கொடுத்ததாக பாடகி செல்வி, இந்த பரிதாப நிலையிலும் நன்றி மறக்காமல் பாடகர் வேல்முருகனை நினைவு கூர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











