Lyca Raid: லைகா தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
சென்னை:பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா (Lyca) நிறுவனத்துக்கு தொடர்புடைய 8 இடங்களில் காலை முதல் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.
கோலிவுட்டின் தயாரிப்பு நிறுவனங்களில் இப்போது முன்னணியில் இருப்பது லைகா நிறுவனம். அந்த நிறுவனம் தமிழில் பல படங்களை தயாரித்துவருகிறது. விஜய்யும், ஏ.ஆர்.முருகதாஸும் இரண்டாவது முறையாக இணைந்த கத்தி படத்தை தயாரித்ததன் மூலம் பிரபலமடைந்தது. அதேசமயம் லைகா நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். மேலும், இலங்கை அதிபர் மகிந்த ராஜ்பக்ஷேவுடன் அந்த நிறுவனம் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டதால் அந்த எதிர்ப்பு எழுந்தது.

பொன்னியின் செல்வன்: கத்தி படத்தை தொடர்ந்து கோலமாவு கோகிலா, செக்கச்சிவந்த வானம், 2.0 போன்ற பல படங்களை தயாரித்தது. இந்தச் சூழலில் எம்ஜிஆர், கமல் ஹாசன் ஆகியோர் முயன்று முடியாத பொன்னியின் செல்வனை மணிரத்னம் இயக்கத்தில் தயாரித்தது லைகா நிறுவனம். தயாரித்ததோடு மட்டுமின்றி அதற்கான புரோமோஷன்களிலும் ரொம்பவே தீவிரமாக செயல்பட்டது.
எதிர்பார்த்த ரிசல்ட் இல்லை: ஆனால் முதல் பாகம் பெற்ற வசூல் 500 கோடி ரூபாயை தாண்டியிருந்த சூழலில் பொன்னிய்ன் செல்வன் இரண்டாம் பாகம் 1000 கோடி ரூபாயை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் வெளியாகி ஒரு மாதம் நிறைவடைய இருக்கும் நிலையில் இதுவரையும் 500 கோடி ரூபாயை தாண்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் லைகா நிறுவனம் கொஞ்சம் அப்செட் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.

அமலாக்கத்துறை சோதனை: இந்நிலையில், சென்னையில் லைகா நிறுவனத்திற்கு சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத் துறையினர் காலை முதலே சோதனை நடத்திவருகின்றனர். தி.நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள லைகா நிறுவனத்திற்கு சொந்தமான 8 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்றுவருகிறது. எந்தப் புகாரின் பேரில் இந்த சோதனையானது நடத்தப்படுகிறது என இன்னும் தெரிவிக்கப்படவில்லை. அமலாக்கத்துறையினரின் அறிக்கையை பொறுத்து அது தெரியவரும் என கருதப்படுகிறது.

லைகாவின் அடுத்தடுத்த படங்கள்: லைகா நிறுவனம் தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தை தயாரித்துவருகிறது. இதில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். அதைத் தொடர்ந்து ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்க ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் படம், மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படம் உள்ளிட்டவைகளை லைகா நிறுவனம் தயாரித்துவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











