என்ன சொல்றீங்க.. இயக்குநர் ஷங்கரிடம் விசாரணையா?..காரணம் புரியாமல் குழம்பிய ரசிகர்கள்
சென்னை : பிரபல இயக்குநரான ஷங்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் எந்த வழக்குக்காக ஆஜரானார் என்ற எந்த விவரமும் தெரியவில்லை.
பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குநர் ஷங்கர் ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர் இடத்தை பிடித்துள்ளார்.
காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன்,ஐ, எந்திரன், 2.o போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர்
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கடைசியாக இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த போது படப்பிடிப்பின் போது ராட்சத கிரைன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்,ஷங்கரின் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து எழுந்த பிரச்சனையை அடுத்து இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது தற்போது வரை படப்பிடிப்பு தொடங்கவில்லை.

RC15
இதையடுத்து ராம்சரணுடன் கூட்டணி சேர்ந்த ஷங்கர், அவர் நடிப்பில் உருவாகி வரும் RC15 படத்தை இயக்கி வருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். திரு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

துருவி துருவி விசாரணை
இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் ஆயிரம் விளக்கில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை துணை இயக்குனர் மல்லிகா அர்ஜுனா முன் ஆஜராகி உள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேலாக துருவி துருவி விசாரணை நடத்தியுள்ளனர். சட்டவிரோத பணபரிமாற்ற குற்றச்சாட்டின் பேரில் ஷங்கரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

பின்புறமாக
ஷங்கரிடம் விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து, அங்கு செய்தியாளர்கள் கூடிவிட்டனர். இதை அறிந்த ஷங்கர் தான் வந்த இனோவா காரை அங்கேயே விட்டுவிட்டு, அமலாக்க அலுவலகத்தின் பின் புறமாக வாடகை காரில் செய்தியாளர்களுக்கு தெரியாமல் அங்கிருந்து சென்றுள்ளார். மேலும், ஷங்கரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து அமலாக்கத்துறையினர் எந்த விதமான தகவலையும் தெரிவிக்கவில்லை. மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஷங்கரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











