ஒரே ஒரு பாட்டு.. ஓயாத பிரச்னை.. ஓபனா சண்டை போட்டுக் கொள்ளும் அறிவு - சந்தோஷ் நாராயணன்!
சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு பாடகர் மற்றும் பாடலாசிரியர் அறிவு மற்றும் பாடகி தீ இணைந்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான பாடலான என்ஜாயி என்சாமி பாடல் வெளியானது. பாடல் ரசிகர்கள் மத்தியில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் மிகவும் அதிக மக்களைச் சென்றடைந்த தனியிசைப் பாடல் என்ற அங்கீகாரத்தை அப்போது அந்த பாடல் பெற்றது.
இந்த பாடலுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரங்களும் கிடைத்தது. இந்த பாடலின் காப்பீட்டு உரிமை பிரச்னையில் சந்தோஷ் நாராயணன் மற்றும் அறிவு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையில் இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் பலர் அறிவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அதேபோல் சந்தோஷ் நாராயணனுக்கு ஆதரவாகவும் குரல்கள் வந்தது. இப்படி இருக்கையில் பாடல் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது என்று அறிவு பகிர்ந்த எக்ஸ் தள பதிவில் தனக்கான நியாயம் இதுவரை கிடைக்கவில்லை என்று குறிப்பிட, அதற்கு சந்தோஷ் நாராயணன் பதில் அளிக்க இருவரும் எக்ஸ் தளத்தில் மாறி மாறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக அறிவு தனது எக்ஸ் பக்கத்தில், "இந்த பாடலுக்கான பின்னணி இசை எனக்கு அனுப்பப்பட்ட பிறகு, நான் அதற்கு வரிகள் எழுதினேன். இன்னும் சொல்லப்போனால், எனது சொந்த பண்பாட்டு வரலாறு மற்றும் வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் வரிகளை எழுதி, மெட்டமைத்துப் பாடினேன். எனது கிராமத்தில், எனது நிலம் மற்றும் மக்களின் கதைகளைக் கொண்டு படமாக்கப்பட்ட இந்தப் பாடலில், முழுப் பங்களிப்பையும் நான் அளித்திருந்தாலும், பாடல் வெளியாகும்போது நான் ஒரு 'Featuring Artist' ஆக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டேன். அப்போது அதன் நுணுக்கங்கள் எனக்குத் தெரியவில்லை, ஆனால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றவர்கள் அதன் உரிமைகளையும் ராயல்டிகளைப் பெறுகிறார்கள். எனக்கு எந்தவிதமான ராயல்டியோ அல்லது உரிமையோ கிடைக்கவில்லை.
கவனமா இருங்க: நான் இப்படிக் சொல்வது அனுதாபம் தேடுவதற்காக அல்ல; மாறாக ஒரு கலைஞனின் உரிமை மற்றும் உழைப்பிற்கான அங்கீகாரத்திற்காகத்தான் இந்த பதிவு. இசை என்பது கூட்டு முயற்சிதான், ஆனால் அதில் நியாயமான அங்கீகாரம் இருக்க வேண்டும். எனவே, என்னைப் போன தனியிசைக் கலைஞர்கள் அனைவரும் தங்களது உரிமைகளை முறையாகத் தெரிந்து கொண்டு, சரியான ஒப்பந்தங்களைச் செய்து தங்களது படைப்புகளைப் பாதுகாத்துக் கொள்வது நல்லது" என்று பதிவிட்டார். இவரது இந்த பதிவுகளுக்கு சந்தோஷ் நாராயணனும் பதில் அளித்துள்ளார்.
விவாதிக்க தயாரா?: இவரது இந்த பதிவுகளுக்கு காட்டமாக பதில் அளித்த சந்தோஷ் நாராயணன், “ உங்களுடைய கருத்துக்களுக்கு உங்களுக்கு உரிமை இருக்கலாம். ஆனால் தொழில்நுட்பம் மற்றும் சட்ட ரீதியாக நீங்கள் முன்வைக்கும் வாதங்கள் எல்லாமே வழக்கம் போல வெறும் கற்பனைதான்; அதில் துளியும் உண்மையில்லை. உங்கள் வாதங்களை நிரூபிக்க என்னிடம் விவாதிக்கத் தயாரா? என்னை எல்லா சமூக வலைதளங்களிலும் 'பிளாக்' (Block) செய்துவிட்டு ஓடுவது என்ன நியாயம்? நான் எதற்கும் தயார், எந்த ஊடகத்திலும் எப்போது வேண்டுமானாலும் உங்கள் பொய்களை நிரூபிக்கக் காத்திருக்கிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.

சட்ட நடவடிக்கை: இவரது பதிவுக்கு,ராயல்டி, உரிமை மற்றும் பங்கீடு தொடர்பான எனது நிலைப்பாட்டை நான் ஏற்கனவே பகிரங்கமாகத் தெரிவித்துவிட்டேன். உங்கள் வீட்டிற்கே நேரில் வந்து பேசியும், தனிப்பட்ட முறையில் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க நான் எடுத்த பல கட்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தது. இது சமூக வலைதளங்களில் விவாதித்துத் தீர்க்க வேண்டிய விஷயமல்ல; உண்மைகள் தானாகப் பேசும். இதற்கான சரியான நடவடிக்கைகளை அதாவது சட்ட ரீதியான நடவடிக்கை மற்றும் அமைப்பு ரீதியான நடவடிக்கைகளைத் தொடர நான் தயாராவே இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











