என்ஜாயி என்ஜாமி சர்ச்சை.. சந்தோஷ் நாராயணன் விளக்கம்..பிரச்சனை முடிவுக்கு வருமா?
சென்னை : இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் "என்ஜாயி என்ஜாமி" பாடல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தீ மற்றும் அறிவு பாடி ஆடியுள்ள என்ஜாய் எஞ்சாமி பாடல் தான் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.
கடந்த ஆண்டு மார்ச் யூடியூப் தளத்தில் வெளியான இந்த பாடல் வெறும் 28 நாட்களிலேயே 100 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்து தற்போது 40 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.

எஞ்சாய் எஞ்சாமி சர்ச்சை
கடந்த ஜூலை 28ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பாடலாசிரியர் அறிவு எழுதி, சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான 'என்ஜாயி எஞ்சாமி' பாடல் அனைவரது முன்னிலையிலும் பாடப்பட்டது. இப்பாடலை எழுதிய பாடகர் அறிவு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. நிகழ்ச்சியில் அவரின் பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

அறிவு உருக்கம்
இது பற்றி சமூக வலைதளங்களில் பலரும் கேள்வியெழுப்பியிருந்த நிலையில் அறிவு இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார். அதில், எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்கு நான் இசையமைத்தேன்..எழுதினேன்.. பாடினேன்.. நடித்தேன். யாரும் எனக்கு ஒரு டியூனையோ, மெலடியையோ அல்லது ஒரு வார்த்தையோ எழுதி கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட 6 மாதங்கள் தூக்கமில்லாமல், மன அழுத்தம் நிறைந்த இரவுகளையும் பகலையும் இந்த பாடலுக்காக கழித்தேன். நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும் போது ஒருபோதும் உங்களிடம் இருப்பதை யாராலும் பறித்துவிட முடியாது. உண்மை எப்போதும் வெல்லும் என பதிவிட்டிருந்தார்.

சந்தோஷ் நாராயணன்
எஞ்சாய் எஞ்சாமி சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள சந்தோஷ் நாராயணன், அதில், என்ஜாய் என்ஜாய் பாடல் உருவான விதம் குறித்து கூற விரும்புகிறேன். டிசம்பர் 2020ம் ஆண்டு இயற்கையை காப்பாற்றும் ஒரு ஆல்பம் பாடலை உருவாக்கும் யோசனையோடு 'தீ' என்னிடம் வந்தார். நான் இசையமைக்க ஏற்பாடு செய்தேன். தீ , அறிவு மற்றும் நானும் ஒருவரையொருவர் நிறைய அன்புடனும் அன்பிற்காகவும் ஒன்றாகச் சேர்ந்து, ஒருவர் இசையமைப்பார் அல்லது பாடலில் வசனங்களை எழுதுவார் என முடிவு எடுத்தோம். இதற்கு Dhee மற்றும் Arivu ஒப்புக்கொண்டனர்.

குழுவின் கூட்டு முயற்சி
மேலும், காக்கா முட்டை, கடைசி விவசாயம் ஆகிய படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் மணிகண்டன் இந்தப் பாடலுக்கான அடித்தளத்தை மிக உன்னிப்பாகத் தேர்ந்தெடுத்ததற்காகவும், பாடல் வரிகளுக்கான ஓட்டத்தையும் திரைக்கதையையும் உருவாக்க அறிவுடன் அவர் பல மணி நேரம் செலவழித்ததற்காகவும் கூறியுள்ள சந்தோஷ் நாராயணன் எஞ்சாய் எஞ்சாமி பாடல் குழுவின் கூட்டு முயற்சி என்று கூறியுள்ளார்.

வாங்கோ வாங்கோ ஒன்னாகி
இந்தப் பாடலின் அனைத்து வருவாய்கள் மற்றும் உரிமைகள் குறித்தும் நான் வெளிப்படையாக இருக்க விரும்புகிறேன். அறிவு மற்றும் கலைஞர்களுக்கு பக்கபலமாக நான் எப்போதும் நின்றிருக்கிறேன். அறிவு பற்றி என்ஜாய் என்ஜாமி ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் பேசியதே அதற்கு சாட்சியாகும். செஸ் ஒலிம்பியாட் 2022 நிகழ்ச்சியில் எஞ்சாமி பாடலில் அறிவு இல்லாதது பெரும் தவறாகி விட்டது. அறிவு அப்போது வெளிநாட்டில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. இதை அவரே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்தார் என்றும் விளக்கம் அளித்துள்ளார். அறிவு ஒரு அற்புதமான கலைஞன் என்பதை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். கலைகளை உருவாக்கி கொண்டு வருவதே எனது குறிக்கோள் மக்கள் ஒன்றாக! வாங்கோ வாங்கோ ஒன்னாகி. அன்புடன் சந்தோஷ் நாராயணன் அந்த கடிதத்தில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











