பிரச்சனைகள் தீர்ந்தது.. கம்பீரமாக கம்பேக் ஆகிறார் கெளதம் மேனன்!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன், சில காலங்களாக பல பிரச்சனைகளில் சிக்கி தனது படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வந்தார்.
தற்போது, அவரது பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து, எனை நோக்கி பாயும் தோட்டா இந்த மாத இறுதியிலும், துருவ நட்சத்திரம் மற்றும் ஜோசுவா இமை போல் காக்க உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாகும் என கெளதம் மேனன் கூறியுள்ளார்.

என்ன பிரச்சனை
கெளதம் மேனன் ஒன்றாக என்டர்டெயின்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் படங்கள் எடுக்கப்பட்ட நேரத்தில் சில பல பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி கெளதம் மேனன் தவித்து வந்தார். மேலும், அவர்கள் தொடர்ந்த வழக்குகளால் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டாவை ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

சிக்கல்
பைனான்ஸ் சிக்கலில் மாட்டிக் கொண்ட கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் செய்ய ஆள் கிடைக்காமல், தொடர்ந்து பல மாதங்களாக தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. மேலும், விக்ரமை வைத்து கெளதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரமும் பாதியிலேயே நிற்கிறது. இதனால், பல கிண்டல் கேலிகளுக்கு ஆளானார் கெளதம் மேனன்.
ரிலீசாகிறது.
இந்நிலையில், தற்போது தனது பிரச்சனைகள் தீர்ந்துவிட்டதாகவும், இந்த மாதம் நவ.,29ம் தேதி தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவான எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீசாகிறது என அறிவித்துள்ளார். வடசென்னை, அசுரன் படங்களை தொடர்ந்து இந்த ஆண்டு தனுஷின் மூன்றாவது ரிலீசாக எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீசாகிறது.
60 நாட்கள்
கெளதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் மாஸ் ஸ்டைலிஷ் லுக்குடன் நடித்து வந்த துருவ நட்சத்திரம் படத்தின் ஷூட்டிங்கும் தடை பட்டு இருந்தது. எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் அறிவிப்பை அறிவித்த கையோடு, இன்னும் துருவ நட்சத்திரம் படத்திற்கு 60 நாள் ஷூட்டிங் மட்டுமே உள்ளது. விரைவில் ஜான் உங்களை சந்திப்பான் என ட்வீட் செய்துள்ளார்.
யோவான் இல்லை
நடிகர் விஜய்யை வைத்து கெளதம் மேனன் யோவான் அத்தியாயம் ஒன்று என்ற தலைப்பில் ஒரு படத்தை தொடங்கப்போவதாக அறிவித்தார். பின்னர் அந்த படம் டிராப் ஆனது. இந்நிலையில், வரும் காதலர் தினத்தன்று வருண் நடிப்பில் ஜோஷுவா இமை போல் காக்க எனும் படம் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிறதாம். ஆனால், இந்த படம் யோவான் கதை அல்ல அதற்கு நிகரான ஒரு ஆக்ஷன் கதை என கெளதம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எல்லாம் யாரால?
கெளதம் வாசுதேவ் மேனனின் இத்தனை பிரச்சனைகளும் எப்படி சட்டென்று ஒரே நாளில் தீர்ந்தது என்ற சந்தேகம் ரசிகர்கள் மனதில் எழ கூடாது என அதற்கும் விடையளித்துள்ளார் கெளதம் மேனன். வேல்ஸ் ஃபிலிம் இன் டர்நேஷனல் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை பார்த்து, அதனை ரிலீஸ் செய்ய சம்மதித்த மேஜிக் தான் கெளதம் மேனன் மீண்டும் கம்பேக் ஆக காரணமாம்.


Click it and Unblock the Notifications











