twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எந்திரன் கதைத் திருட்டு தொடர்பாக ரூ. 1 கோடி கேட்டு வழக்கு-கலாநிதி மாறன், ஷங்கருக்கு நோட்டீஸ்

    By Sudha
    |

    சென்னை: எந்திரன் திரைப்படத்தின் கதை திருடப்பட்டதாக கூறி எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்கிற அமுதா தமிழ்நாடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழ்நாடன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

    நான் சிறுவயதில் இருந்து கவிதைகள், கதைகள், நாவல்கள் எழுதி வருகிறேன். அமுதா தமிழ்நாடன் என்ற புனைப்பெயரில் நான் எழுதி வெளியான கதைகள், கவிதைகளுக்கு பாராட்டுகள், பரிசுகள் பெற்றுள்ளேன்.

    அந்த வரிசையில் நான் எழுதிய ஜுகிபா என்ற சிறுகதை இனிய உதயம் என்ற இலக்கிய பத்திரிகையில் கடந்த 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியானது. லட்சக்கணக்கான மக்கள் அதை படித்துள்ளனர். பின்னர் அதே கதை, 2007-ம் ஆண்டில் சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சார்பில் திக் திக் தீபிகா என்ற புத்தகத்திலும் வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட எந்திரன் சினிமாவை பார்த்த எனது வாசகர்கள் மற்றும் நண்பர்கள் நேரிலும், கடிதம் மூலமாகவும் என்னை தொடர்பு கொண்டு பேசினர். எனது படைப்பான ஜுகிபா என்ற சிறுகதையை அப்படியே எந்திரன் படத்தில் எடுத்து உபயோகித்து இருக்கின்றனர் என்று தெரிவித்தனர்.

    எனவே நானும் எந்திரன் படத்தை தியேட்டரில் பார்த்தேன். அதைப்பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தேன். எனது ஜுகிபா கதையை மூலக்கதையாக வைத்து, சினிமாத்தனமான பாட்டு, சண்டை, கிராபிக்ஸ் காட்சிகளை சேர்த்து எந்திரன் சினிமாவை உருவாக்கி இருப்பது தெரிய வந்தது.

    பதிவு செய்யப்பட்ட பத்திரிகையில் வெளியானதை அடுத்து, நான் எழுதிய ஜுகிபா கதையின் பதிப்புரிமை எனக்கு சொந்தமானதாகும். ஆனால் என்னிடமோ, எனது கதையை வெளியிட்ட இனிய உதயம் பத்திரிகை வெளியீட்டாளரிடமோ அந்தக்கதையை பயன்படுத்த முன்அனுமதி பெறவில்லை.

    1997-98-ம் ஆண்டில் இந்தக்கதையை கற்பனை செய்ததாக கூறி எந்திரன் படத்தை உருவாக்கி இயக்கி இருக்கிறார் ஷங்கர். சன் பிக்சர்ஸ் நிறுவனமும், அதன் நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறனும் எந்திரன் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியிட்டு உள்ளனர்.

    எனது கதையான ஜுகிபாவை திருடி எந்திரன் சினிமாவை எடுத்தது பதிப்புரிமை சட்டத்தின்படி தவறாகும். எனவே எனக்கு நஷ்டஈடாக ஒரு கோடி ரூபாய் கொடுப்பதற்கு உத்தரவிட வேண்டும். எந்திரன் சினிமாவை தியேட்டர்கள் மூலமாகவோ, வேறு மீடியாக்கள் வழியாகவோ திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் இதுதொடர்பாக வருகிற 18ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி கூறி கலாநிதி மாறன், ஷங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு நவம்பர் 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X