குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த எப்ஸ்டீன்.. பிரபல இயக்குநர் தொடர்பு?.. பெரும் பஞ்சாயத்து
சென்னை: உலகையே உலுக்கியிருக்கிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ். குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அமெரிக்காவை சேர்ந்த எப்ஸ்டீன் கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பிறகு அவர் உயிரிழந்தார். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் அவர் தொடர்பான மின்னஞ்சல்கள், புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. சூழல் இப்படி இருக்க அவருடன் இயக்குநர் மீரா நாயரும் தொடர்பு வைத்திருந்தாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் பெரிய பணக்காரர் அவர். அதிகார மட்டத்தினருடன் நெருங்கிய தொர்பில் இருந்த அவர் சிறு குழந்தைகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டார். அதாவது பல குழந்தைகளை கடத்தி தனி தீவுக்கு கொண்டு சென்று; உலகத்தில் பிரபலமான பலரது பாலியல் தேவைக்கு ஆளாக்கியதாக தெரிகிறது. இந்த குரூர சம்பவங்கள் எல்லாம் வெளியே வந்து கடந்த 2019ஆம் ஆண்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
உயிரிழந்த எப்ஸ்டீன்: அதனையடுத்து சிறையிலேயே உயிரிழக்கவும் செய்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அப்போது சர்ச்சை எழுந்தது. அதேசமயம் அவர் உயிரோடு இருந்தால் பல ரகசியங்கள், அந்தரங்கங்கள் வெளியே வந்துவிடும் என்று அஞ்சி; அதிகாரத்தில் இருப்பவர்கள் கொலை செய்துவிட்டதாகவும் பேசப்பட்டது. முக்கியமாக இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பெயரும் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

வெளியான ஆவணங்கள்: பிறகு அந்த பிரச்னை கொஞ்சம் ஓய்ந்திருந்தது. தற்போது சில நாட்களுக்கு முன்னதாக எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடப்பட்டன. லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட அந்த கோப்பில் பில்கேட்ஸ், எலான் மஸ்க், விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த சமாசாரம் உலகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை கிளப்பியிருக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி பெயரும்: அவர்கள் மட்டுமின்றி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் இதில் இடம்பெற்றிருக்கிறது. ஜூலை ஒன்பதாம் தேதி அனுப்பப்பட்ட மெயில் ஒன்றில், 'இந்திய பிரதமர் மோடி தேவையான ஆலோசனையை பெற்றார். இஸ்ரேலில் வைத்து அமெரிக்க அதிபரின் நலனுக்காக அனைத்தையும் செய்தார்' என எப்ஸ்டீன் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் இந்தியாவிலும் பூதாகரமாகியிருக்கிறது. எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரும் இதுகுறித்து பேசிவருகிறார்கள்.
இயக்குநர் மீரா நாயர்: இவர்களைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த இயக்குநர் மீரா நாயரின் பெயரும் மின்னஞ்சல்களில் இருக்கின்றன.'ஜிஸ்லெயினின் டவுன் ஹவுஸை விட்டு இப்போதுதான் வந்தேன். படத்துக்கு பிறகு நடந்த பார்ட்டி அது. பில் கிளிண்டன், ஜெஃப் பெசோஸ் இருந்தார்கள். மேலும் இயக்குநர் மீரா நாயரும் இருந்தார். படத்துக்கு நல்ல வரவேற்பு. பெண்களுக்கு அதிகம் பிடித்தது போல் தெரிகிறது. அவர்கள் எல்லாம் ஒரு அசிங்கமான பார்ட்டியில் இருந்தார்கள். விசித்திரமாக இருந்தது" என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த விவகாரத்தில் மீரா நாயரின் பெயரும் அடிபட தொடங்கியிருப்பதால் திரைத்துறையிலும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
யார் மீரா நாயர்?: மீரா நாயர் என்பவர் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் பிறந்தவர். இவர் சலாம் பாம்பே, மிஸ்ஸிஸிப்பில் மசாலா, காமசூத்ரா, மன்சூன் வெட்டிங் என பல படங்களை இயக்கி வெற்றி கண்டவர். கேன்ஸ் திரைப்பட விருது வென்றிருக்கும் அவர் ஆஸ்கர் விருதுக்கும் அவரது படங்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் கோல்டன் க்ளோப் விருதும் வென்றிருக்கிறார். இவை அனைத்தையும் தாண்டி இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதையும் கடந்த 2012ஆம் ஆண்டு மீரா நாயர் பெற்றிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











