43 அரியர்ஸ்.. கவிதை மூலம் மாரிமுத்துவுக்கு கிடைத்த காதலி.. ஆனால் ஒரு ட்விஸ்ட்.. இப்படி ஒரு சோக கதையா
சென்னை: Ethir Neechal Marimuthu (எதிர்நீச்சல் மாரிமுத்து) இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து கடிதத்தின் மூலம் காதல் வளர்த்திருக்கிறார். அதுகுறித்து பலரும் தற்போது பேசிவருகின்றனர்.
வசந்த், மணிரத்னம், எஸ்.ஜே.சூர்யா, ராஜ்கிரண், சீமான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மாரிமுத்து வைரமுத்துவிடமும் உதவியாளராக இருந்தார். அதன் பிறகு கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கினார். கடந்த 2008ஆம் ஆண்டு கண்ணும் கண்ணும் படமும், கடந்த 2014ஆம் ஆண்டு புலிவால் படமும் ரிலீஸானது. இரண்டு படங்களும் சுமாரான வரவேற்பையே பெற்றன.

நடிகர் மாரிமுத்து: சிவில் இன்ஜினியரிங் படித்த மாரிமுத்து கலை மீது இருக்கும் ஆர்வத்தால் சினிமாவுக்குள் வந்தார். இயக்கிய படங்கள் சரியாக போகாவிட்டாலும் அடுத்த பரிமாணமாக நடிகர் அவதாரம் எடுத்தார். யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர் கடந்த மாதம் வெளியான ஜெயிலர் படத்திலும் நடித்திருந்தார். மேலும் இந்தியன் 2, கங்குவா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.
சின்னத்திரையில் மாரிமுத்து: எப்போதும் ஒரு நடிகருக்கு பெரிய திரைதான் பிரபல்யத்தை அதிகம் ஏற்படுத்திக்கொடுக்கும். ஆனால் மாரிமுத்துவுக்கோ பெரிய திரையவிடவும் சின்னத்திரைதான் பெரிய பிரபல்யத்தை உருவாக்கிக்கொடுத்தது. திருச்செல்வம் இயக்கத்தில் அவர் நடித்த எதிர்நீச்சல் நாடகம் பட்டித்தொட்டியெங்கும் பேமஸ். அதில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார் மாரிமுத்து.
கவிதைகள்: மாரிமுத்து அவ்வப்போது கவிதைகள் எழுதியதிலும் கெட்டிக்காரர். அப்படி அவர் எழுதிய கவிதைதான், "ஆளை தூக்கும் ஆடி காற்றில் வெட்ட வெளியில் நின்றுகொண்டு கடைசி குச்சியில் சிகரெட்டை பற்ற வைக்கும்போது இருக்கும் எச்சரிக்கை உணர்வு எனது வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதைகளிலும் இருந்திருக்கலாம்" என்பதுதான். அந்தக் கவிதையை ஒரு பேட்டியில் அவர் சொல்லிய பிறகுதான் தெரிந்தது அவருக்குள் ஒரு கவிஞரும் இருந்திருக்கிறார் என்று.
கவிதை மூலம் கிடைத்த காதல்: இந்நிலையில் மாரிமுத்து ஒரு பேட்டியில் சொன்ன விஷயம் தற்போது பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. அவர் அளித்த அந்தப் பேட்டியில் "கடிதத்தில் கவிதைகள் எழுதி எழுதி ஒரு பெண்ணுடன் எனக்கு காதல் ஏற்பட்டது. அந்தப் பெண்ணின் சொந்த ஊர் குற்றாலம். அப்போது நான் சிவகாசியில் பொறியியல் படித்துக்கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் இரண்டு பேருக்கும் காதல் உருவானது உறுதியானதும் அந்தப் பெண்ணை பார்ப்பதற்காக குற்றாலத்துக்கு சென்றுவிட்டேன்.
ஆனால் அவர் சொன்ன முகவரியில் சென்று பார்க்கும்போது அந்தப் பெண் அங்கு இல்லை. உடனே அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தேன். அதற்கு அவர்கள் குடும்பத்தோடு ஊரை காலி செய்துவிட்டார்கள். எங்கு சென்றிருக்கிறார்கள் என்பதுகூட எங்களுக்கு தெரியாது என்று சொல்லிவிட்டார்கள். அந்த பொறியை வைத்துதான் என்னுடைய முதல் படமான கண்ணும் கண்ணும் படத்தை இயக்கினேன்" என்றார்.
மேலும் அந்தப் பேட்டியில் பேசிய அவர் முதல் மரியாதை படத்தை பார்த்த பிறகுதான் எனக்கு சினிமா மீதான ஆசையே பிறந்தது. அதனையடுத்து இனி நமக்கு இன்ஜினியரிங் படிப்பு செட் ஆகாது என முடிவு செய்துவிட்டேன். அதனால் ஒழுங்காக படிக்கவும் இல்லை. இதுவரையில் எனக்கு 43 அரியர்கள் இருக்கின்றன" எனவும் குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











