Ethir Neechal Marimuthu - பிக்பாஸுக்குள் போனால் வீட்டை இரண்டாக்கிடுவேன்.. எதிர்நீச்சல் மாரிமுத்து தடாலடி
சென்னை: Ethir Neechal Marimuthu (எதிர்நீச்சல் மாரிமுத்து) பிக்பாஸ் வீட்டுக்குள் அந்த வீட்டை ரெண்டாக்கிடுவேன் என எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் மாரிமுத்து தெரிவித்திருக்கிறார்.
வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மாரிமுத்து. அதுமட்டுமின்றி வைரமுத்துவிடமும் சில காலம் உதவியாளராக இருந்தார். தொடர்ந்து கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கினார். இரண்டு படங்களுமே சொல்லிக்கொள்ளும்படியான வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து நடிகராக களமிறங்கினார் அவர். அதன்படி யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

தொடர்ந்து வாய்ப்புகள்: முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் பல படங்களில் நடித்தார். கமல் ஹாசன் நடித்த விக்ரம், ரஜினி நடித்த ஜெயிலர் என தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். அவரது எதார்த்தமான உடல்மொழியும், வாய் மொழியும் ரசிக்கும்படியே இருக்கிறது.
எதிர்நீச்சல்: பெரிய திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கிவருகிறார் மாரிமுத்து. அதன்படி எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். அதில் அவரது எதார்த்தமான நடிப்பும், பேச்சும் அட்டகாசமாக இருக்கிறது. அதன் காரணமாக அவர் சினிமாவில் அடைந்த பிரபலத்தைவிட சீரியல் மூலம் பிரபலமடைந்திருக்கிறார். சமூக வலைதளங்களிலும் ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில்: இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து பேசிய மாரிமுத்து, "பிக்பாஸ் என்பது பெரிய ப்ளாட்ஃபார்ம். அதில் கலந்துகொண்டால் உலகம் முழுவதும் பிரபலமாகிவிடலாம் என்பது உண்மைதான். ஆனால் இப்போது நான் நீண்ட ப்ராஜெக்ட்டில் இருக்கிறேன். அது பெயரையும் பெற்று தந்திருக்கிறது. அந்த சீரியலை விட்டு எங்கேயும் நகரமுடியாது.
ரெண்டாக்கிடுவேன்: ஒருவேளை பிக்பாஸ் வீட்டுக்குள் போனால் வீட்டை ரெண்டாக்காமல் விடமாட்டேன். ஒரு உலுக்கு உலுக்கிடுவேன். நான் மட்டும் இந்த சீசனுக்குள் போனால் பிக்பாஸ் வரலாற்றிலேயே இந்த சீசன் தான் முதலிடத்தில் இருக்கும்" என்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்களை நிறைவு செய்திருக்கிறது. கடந்த சீசனில் அசீம் முதலிடத்தையும், விக்ரமன் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். விரைவில் ஏழாவது சீசன் தொடங்கவிருக்கிறது. அதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.


Click it and Unblock the Notifications











