அப்படியொரு மாணவனை பார்த்ததே இல்லை.. பாதியிலேயே போயிடுவான்னு நினைக்கல.. மாரிமுத்து ஆசிரியர்கள் வேதனை
சென்னை: இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானது திரையுலக பிரபலங்களையும், சின்னத்திரை கலைஞர்களையும், பொதுமக்களையும் வெகுவாக பாதித்துள்ளது.
சென்னையில் இருந்து அவரது உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே இறுதி சடங்குகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தேனி மயிலாடும்பாறையில் உள்ள ஜி.ஆர் வரதராஜுலு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாரிமுத்துவின் ஆசிரியர்கள் ஆழ்ந்த இரங்கல்களையும் மாரிமுத்து எப்பேர்ப்பட்ட மாணவர் என்பது குறித்தும் அளித்த பேட்டி ரசிகர்ளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மாரிமுத்து நன்றாக படிக்கக்கூடிய மாணவர் என்றும் அனைத்து ஆசிரியர்கள் மீதும் அன்பும் மரியாதையும் கொண்டவர் என்றும் அவரது கையெழுத்து அப்படியே முத்து முத்தாக இருக்கும் என்றும் புகழ்ந்துள்ளனர்.
சினிமாவின் மீது ஏற்பட்ட நாட்டம் காரணமாக சென்னைக்கு புறப்பட்டு சென்ற மாரிமுத்து கவிஞர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்றி பட்டை தீட்டப்பட்டார் என்பது தான் எங்களுக்கு ஆரம்பத்தில் தெரியும்.
அதன் பின்னர் மாரிமுத்து பிரபலமான நிலையில் அடிக்கடி பள்ளி விழாக்களுக்கு வருவார். இந்த ஆண்டு கூட ஜனவரி மாதம் எங்கள் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு நடிகர் மாரிமுத்து வந்திருந்தார். அப்படி ஒரு தங்கமான மனிதர். எப்போதுமே ஆசிரியர்கள் மீது மதிப்பு கொண்டவர். எல்லா ஆசிரியர்களும் அவர் மீது அன்பு செய்தனர்.
இன்னும் படிப்பில் ஆர்வம் செலுத்தி படித்திருந்தால் வேறு ஒரு இடத்திற்கும் அவரால் சென்றிருக்க முடியும் ஆனால், கலை மீது கொண்ட ஆர்வத்தினால் சினிமாவில் போராடி தற்போது தான் பெரிய அளவில் புகழ் அடைய ஆரம்பித்து இருந்தார்.
ஆனால் அதற்குள் பாதியிலேயே அவர் விட்டுச் சென்றது அவரது ஆசிரியர்களான எங்களுக்கு மீள முடியாத துயரத்தை கொடுத்துள்ளது என்றால் அவரது குடும்பத்தினருக்கு எந்த அளவுக்கு அவரது இழப்பு பேரிழப்பாக இருக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. கடவுள்தான் மாரிமுத்துவின் மறைவு துக்கத்திலிருந்து அந்த குடும்பத்தினரை கொண்டு வர வேண்டும் என அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











