Actress Poornima : காதல் பெரியதாக தெரிந்தது.. 25 படங்களை மறுத்தேன்.. பாக்யராஜ், பூர்ணிமா காதல் கதை!
சென்னை : தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நாயகியாக இருக்கும் பூர்ணிமா பாக்யராஜ் தனது காதல் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, டார்லிங் டார்லிங் டார்லிங், விதி போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து என்பதுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூர்ணிமா.
இவர் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே பாக்யராஜை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி விட்டார். 29 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.

நடிகை பூர்ணிமா : இந்நிலையில் நடிகை பூர்ணிமா நடிகை குட்டிபத்மினி சொந்தமாக நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தனது காதல் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், பயணங்கள் முடிவதில்லை படத்திற்கு பிறகு தமிழ்,மலையாளம்,தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தேன்.
அவர் மீது மரியாதை : அப்போது மலையாளப்படத்தின் ஷூட்டிங்கிற்காக பாரீஸ் போக வேண்டி இருந்ததால், மும்பையில் அம்மாவுடன் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு போகலாம் என்று நினைத்து மும்பைக்கு சென்றேன் அப்போது, என்னுடைய பிஆர்ஒ பாக்யராஜ் சார் இங்கே தான் படப்பிடிப்புக்கு வந்து இருக்கிறார் என்றார். அவருடன் இதற்கு முன் டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் நடித்து இருக்கிறேன். அவர் மீது நல்ல மரியாதை உண்டு. அதனால், அவருக்கு போன் செய்து எங்க ஊருக்கு வந்து இருக்கீங்க வீட்டுக்கு சாப்பிட வாங்க என்று அழைத்தேன்.

பல மணிநேரம் பேச்சு : அடுத்த நாள் வீட்டிற்கு வந்து விட்டார், எனக்கு தலைகால் புரியவில்லை, சாப்பிடலாம் வாங்க என்று அழைத்ததால் நான் சாப்பிட வரவில்லை என்று, வீட்டிற்கு கூப்டீங்களே என்று தான் வந்தேன் என்றார். அவர் வீட்டிற்கு வந்த நேரம் நவராத்திரி என்பதால், வெளியில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டு இருந்தது. அதை பால்கனியில் இருந்து பார்த்துக்கொண்டே பலமணி நேரம் பேசிக்கொண்டே இருந்தோம். சரி பாரீஸ்சுக்கு போய்ட்டு போன் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளப்பிவிட்டார்.
போன் செய்தார் : நானும் பாரீஸ் போய்விட்டு எதற்கு போன் பண்ண சொன்னார் என்ற குழப்பத்திலேயே அவருக்கு இரண்டு முறை போன் செய்தேன், ஆனால், அவரிடம் பேச முடியாமல் போனது. இதையடுத்து, அவரே எனக்கு போன் செய்து ஷூட்டிங் எப்படி போகிறது என்று கேட்டார். என்னடா போன் பண்ணி ஷூட்டிங் எப்படி போகுது என்று கேட்கிறாரே என்று நினைத்தேன்.
திருமணத்திற்கு சம்மதமா : பாரீசில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை வந்த போது ஏர்போட்டில் காருடன் எனக்காக காத்துக்கொண்டு இருந்தார். அப்போது, என் அம்மாவிடம் நீங்கள் இந்த காரில் வீட்டுக்கு போங்க நான், அவங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும் என்று என்னை பீச்சிற்கு அழைத்து சென்று, உன்னை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். உனக்கு சம்மதமா என்று கேட்டார். அம்மா, அப்பாவிடம் கேளுங்கள் என்றேன். அனைவரிடமும் கேட்டாச்சு உனக்கு சம்மதமா என்றார் நானும் ஒகே சொல்லிவிட்டேன்.

25 படங்களை மறுத்தேன் : எனக்கு திருமணம் நடக்கும் போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் கைத்திருந்தேன். ஆனால், அந்த நேரத்தில் அவரும், காதலும் பெரியதாக தெரிந்ததால் 25 படங்களையும் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். பின் 29 ஆண்டுகள் கழித்து தான் , மீண்டும் சினிமாவிற்குள் வந்தேன். அதுவே ரொம்ப யோசித்து தான் வந்தேன் என்றார்.


Click it and Unblock the Notifications











