F3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…தமன்னா கொடுத்த இன்ஸ்டா அப்டேட்
ஹைதராபாத் : மே மாத இறுதியில் சினிமா ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது F3 தெலுங்கு திரைப்படம். வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் கதாநாயகர்களாக நடிக்கும் இந்தப் படத்தின் முதல் பாகமான F2 திரைப்படம் ஆந்திராவில் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது.
F3 படத்தில் கதாநாயகிகளாக தமன்னா மற்றும் மெஹரின் பிரதா நடித்துள்ளனர்.
இதற்கிடையில் தற்போது தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் F3 படத்தின் ரிலீஸ் தேதியை வீடியோவுடன் வெளியிட்டு மகிழ்ச்சியை தெரியப்படுத்தியுள்ளார்.

F2 தொடர்ச்சி
2019ஆம் ஆண்டு F2 திரைப்படம் ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்றது. குடும்பங்கள் ரசிக்கும்படியாக எடுக்கப்பட்ட இந்த படம் அந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த படமாக முன்னணியில் நின்றது. முழு நீள காமெடி படமாக எடுக்கப்பட்ட இதில் வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் நடிப்பு மிகவும் ரசிக்க வைத்தது. மனைவிகளின் தொல்லை தாங்க முடியாமல் அவர்களுக்குத் தெரியாமல் வெளிநாட்டுக்கு தப்பித்து செல்லும் கதாநாயகர்கள் இருவரையும் தமன்னா மற்றும் மெஹரின் பிரதா எப்படி கண்டுபிடித்து ஒன்று சேர்ந்தார்கள் என்பது இந்தப் படத்தின் கதை. காட்சிக்கு காட்சி நகைச்சுவை தெறிக்கும் இந்த படத்தை இயக்கியவர் அணில் ரவிபுடி. தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் F3 படத்தின் இயக்குனரும் இவரே. இப்படத்தை தயாரிப்பவர் தில் ராஜு.

அணில் ரவிபுடி படம்
பட்டாஸ் எனும் ஆக்சன் படத்துடன் ஆந்திர திரைத்துறைக்கு அறிமுகமானவர் அணில் ரவிபுடி. என்டிஆர் பேரன் கல்யாணம் கதாநாயகனாக நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. பட்டாஸ் ஆக்ஷன் படமாக இருந்தாலும் அதை எடுக்கும் விதத்தில் நகைச்சுவையை கொடுத்திருப்பார் இயக்குனர். 2017 ஆம் ஆண்டு ரவிதேஜா கதாநாயகனாக நடித்த ராஜா தி கிரேட் திரைப்படம் இவரது மார்க்கெட்டை உயர்த்தியது. ஆந்திர திரையுலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டார். அதைத் தொடர்ந்து F2 திரைப்படத்தை இயக்கி சூப்பர் ஹிட் அடித்தார். அதன்பிறகு மகேஷ்பாபு நடித்த சரிலெரு நீகேவ்வாரு படத்தை இயக்கி ஸ்டார் இயக்குனர் ஆனார். இயக்குனர் அணில் ரவிபுடி நகைச்சுவையோடு படம் எடுப்பதில் பெயர் வாங்கியவர். முன்னர் F2 மூலம் மக்களை சிரிக்க வைத்த அதே கூட்டணி என்பதால் F3 திரைப்படமும் நிச்சயம் பெரிய அளவில் வெற்றி பெறும் என பேசப்படுகிறது.

பாடல் மேக்கிங் வீடியோ வெளியீடு
சமீபத்தில் F3 படத்தின் ஒரு பாடலான " ooh aah aahaa ahaa " எனும் பாடலை ரிலீஸ் செய்தது படக்குழு. இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்பாடலின் வெற்றியை தொடர்ந்து இந்தப் பாடல் உருவான மேக்கிங் வீடியோ வெளியிட்டது படக்குழு. வெங்கடேஷ் தமன்னா, வருண் தேஜ், மெஹரின் பிறத, சோனல் சவுகான் சேர்ந்து நடனம் ஆடிய இந்த பாடலுக்கு டான்ஸ் கோரியோகிராபி செய்தவர் சேகர் மாஸ்டர். இந்தப் பாடல் பதிவான லொகேஷன் சம்பந்தப்பட்ட வீடியோவையும் ரிலீஸ் செய்துள்ளனர். இது மட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.
F3 ரிலீஸ் தேதி
சமீப காலமாக தொடர்ந்து ஆக்சன் படங்கள் வந்து கொண்டு இருக்கும் வேளையில், F3 போன்ற முழுநீள நகைச்சுவை படங்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட வைக்கும் என ரசிகர்கள் வினவுகின்றனர். F2 படத்தில் மனைவிமார்கள் எப்படி கணவன்மார்களை தொல்லை செய்தார்களோ அதே போல F3 திரைப்படத்திலும் மனைவிமார்கள் தொல்லை தொடரும் என தெரிகிறது. F3 திரைப்படம் பணம் சார்ந்த படமாக இருக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது. மனைவிமார்கள் கணவர்களை அதிகம் சம்பாதித்து கொண்டு வரச் சொல்ல அதை கணவர்கள் எப்படி சமாளித்தார்கள் என்பதை நகைச்சுவை தொனியில் சொல்லும் படமாக இருக்கும் என தெரிகிறது. ராஜேந்திரபிரசாத், சுனில், முரளி சர்மா, சங்கீதா, அஞ்சலி போன்ற நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இந்தப் படம் அடுத்த மாதம் இருபத்தி ஏழாம் தேதி ரிலீஸாகும் என தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை தெரியப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











