டிக்கிலோனா பட இயக்குனரின் பெயரில் போலி கணக்கு தொடங்கி பண மோசடி..எச்சரிக்கும் இயக்குனர்!
சென்னை : நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்திருந்த டிக்கிலோனா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகராக பல திரைப்படங்களில் நடித்திருந்த கார்த்திக் யோகி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார்.
இந்த நிலையில் அடுத்த படத்தில் முன்னணி நடிகரை இயக்க தயாராகி கொண்டிருக்கும் கார்த்திக் யோகியின் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி பணம் மோசடி செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூன்று வேடங்களில்
ஆக்சன் படமா இருந்தாலும் சரி காதல் திரைப்படம் என்றாலும் சரி பேய் படம் என்றாலும் சரி அதை தன்னுடைய பாணியில் கலகலப்பு குறையாமல் காமெடியுடன் படங்களை வழங்கி வருகிறார் நடிகர் சந்தானம். அந்த வகையில் இப்பொழுது இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் முதன்முறையாக மூன்று வேடங்களில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிக்கிலோனா. இந்த படம் தொடங்கப்பட்டதிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்க சமீபத்தில் இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

சிறு சிறு வேடங்களில்
டைம் ட்ராவல் கான்செப்ட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. 2027 லிருந்து 2020 க்கு பயணம் செய்து தனக்கு நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் ஹீரோ இறுதியில் அந்த கல்யாணத்தை நிறுத்தினாரா இல்லையா என்பதை மிகவும் காமெடி கலந்து இப்படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் கார்த்திக் யோகி. இவர் ஏற்கனவே சவாரி,நினைத்தது யாரோ, உருமீன், பலூன் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

போலி கணக்கு
இப்பொழுது டிக்கிலோனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். அடுத்ததாக முன்னணி நடிகர் ஒருவரை வைத்து இயக்க தரமான காமெடி கதை ஒன்றை தயார் செய்து வருகிறார். இந்த நிலையில் பேஸ்புக்கில் தன்னுடைய பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாரும் நம்பாதீர்கள்
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது என்னுடைய ஒரிஜினல் பேஸ்புக் கணக்கு போலவே அச்சு அசல் போலியாக மற்றொரு கணக்கை தொடங்கி என்னுடைய நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் அனைவரிடத்திலும் நான் கேட்பது போலவே பணத்தை கேட்டு மோசடி செய்து வருகின்றனர். என் பெயரை பயன்படுத்தி உங்களிடம் யாராவது பணம் கேட்டால் யாரும் நம்பாதீர்கள் அந்த ஐடியை ரிப்போர்ட் செய்து விடுங்கள் அது போலியான கணக்கு யாரும் பணம் கேட்டால் தராதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











