Vijay yesudas - நகை திருட்டு.. பொய் புகார் அளித்தாரா விஜய் யேசுதாஸ் மனைவி.. போலீஸார் விசாரணை
சென்னை: Vijay Yesudas (விஜய் யேசுதாஸ்) பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ் வீட்டில் நகை திருடுபோன வழக்கில் பொய் புகார் அளிக்கப்பட்டிருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடக்கவிருக்கிறது.
இந்திய அளவில் பிரபலமான பாடகர்களில் ஒருவர் யேசுதாஸ். பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கும் அவருக்கு விஜய் யேசுதாஸ் என்ற மகன் இருக்கிறார். இவரும் சினிமாவில் பிரபல பாடகராக இருந்துவருகிறார். பல பாடல்களை பாடியிருக்கும் விஜய் யேசுதாஸ் தனுஷ் நடித்த மாரி திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வந்த அந்தப் படத்தை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
விஜய் யேசுதாஸ் வீட்டில் கொள்ளை: விஜய் யேசுதாஸுக்கு சென்னை அபிராமிபுரத்தில் வீடு ஒன்று இருக்கிறது. சென்னை வரும்போது அவர் இந்த வீட்டில் தங்குவது வழக்கம். அவருடன் அவரது மனைவி தர்ஷணாவும் அங்கிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அபிராமிபுரம் வீட்டிலிருந்து 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போயிருப்பதாக அவரது மனைவி தர்ஷணா காவல் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்தார்.
வேலை செய்பவர்கள் மீது சந்தேகம்: தர்ஷணா அளித்த புகாரில், கடந்த வருடம் டிசம்பர் இரண்டாம் தேதி தங்க நகைகளை பார்த்தேன். அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் பார்த்தபோது வீட்டில் இருந்த நகைகளை காணவில்லை. இந்த நகைகள் காணாமல் போனதற்கும் வீட்டில் வேலை செய்யும் மேனகா மற்றும் பெருமாள் ஆகியோருக்கும் சம்பந்தம் இருப்பதாக சந்தேகம் இருக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.
விசாரணை: தர்ஷணா அளித்த புகாரின் அடிப்படையில் அபிராமிபுரம் காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியிருக்கின்றனர். அந்தவகையில் விஜய் யேசுதாஸின் வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமரா மற்றும் அவரது வீட்டுக்கு அருகில் இருக்கும் சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அதுமட்டுமின்றி வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களையும் நேரில் வரவழைத்து விசாரித்தனர்.

சம்பந்தம் இல்லை: காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் வீட்டு வேலையாட்கள் யாரும் நகைகளை திருடவில்லை என கூறியிருக்கின்றனர். அதேசமயம் விசாரணைக்காக விஜய் யேசுதாஸை தொடர்புகொண்டபோது அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் அவரது மனைவி தர்ஷணாவும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
பூட்டு உடையவில்லை: இதற்கிடையே நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு நம்பர் முறையில் பூட்டக்கூடிய பூட்டு இருக்கிறது. ஆனால் அந்தப் பூட்டும் உடைபடவில்லை என காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர். மேலும் அந்த லாக்கிற்கான நம்பர் தர்ஷணாவுக்கும், விஜய் யேசுதாஸுக்கும் மட்டுமே தெரியும் எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நகை திருடுபோனதாக கூறப்படும் நாளிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்தே புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இவர்கள் ஒருவேளை பொய் புகார் அளித்திருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரணையை காவல் துறையினர் தொடங்கவிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











