திரையுலகில் அடுத்த சோகம்... ரஜினி பட பிரபலம் ஹேம்நாத் பாபுஜி மறைவு...
சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர், சினிமா பைனான்சியர் என பிரபலமானவர் ஹேம்நாக் பாபுஜி.
ரஜினி நடிப்பில் வெளியான காளி, கர்ஜனை படங்களை தயாரித்துள்ளார்.
அதேபோல் கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சுயம்வரம் படத்தையும் தயாரித்துள்ளார்.
மேலும், கில்டு அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்துள்ள ஹேம்நாக் இன்று காலமானார்.

ரஜினி பட தயாரிப்பாளார்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் 1980ம் ஆண்டு வெளியான திரைப்படம் காளி. மகேந்திரன் திரைக்கதையில் சசி இயக்கிய இந்தப் படம் ரஜினிக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்தப் படத்தின் தெலுங்கு வெர்ஷனில் ரஜினியுடன் சிரஞ்சீவியும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 1981ல் ரஜினியின் நடிப்பில் வெளியான திரைப்படம் கர்ஜனை. இந்தப் படத்தை சிவி ராஜேந்திரன் இயக்கியிருந்தார். காளி, கர்ஜனை என இந்தப் படங்களை தயாரித்தவர் ஹேம்நாக் பாபுஜி.

ஹேம்நாக் பாபுஜி மறைவு
திரைப்படங்களை தயாரித்தது மட்டுமின்றி பிரபல சினிமா பைனான்சியராகவும் வலம் வந்தவர் ஹேம்நாக் பாபுஜி. இவர் இன்று காலை உயிரிழந்தார். வயது மூப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது, ஆனாலும் இதுவரை அவரது உயிரிழப்புக்கான காரணம் என்னவென்று தகவல்கள் வெளியாகவில்லை. முக்கியமாக கின்னஸ் சாதனைக்காக 24 மணி நேரத்தில் தமிழில் உருவான சுயம்வரம் படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

கின்னஸ் சாதனை திரைப்படம்
24 மணி நேரத்தில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த சுயம்வரம் படத்தை, பல இயக்குநர்கள் இணைந்து இயக்கினர். சரியாக 24 மணி நேரத்தில் எடுத்து முடிக்கப்பட்ட இந்தப் படம் கின்னஸ் சாதனையிலும் இடம்பிடித்தது. தமிழின் மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படத்தை தயாரித்தவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஹேம்நாக் பாபுஜி. இந்நிலையில் அவர் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய திரைப்படம், டிவி தயாரிப்பாளர் சங்கம் எனப்படும் கில்டு அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார் ஹேம்நாக் பாபுஜி.

தொடரும் சோகம்
நடிகை ஜமுனா, ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம், இயக்குநர் கே.விஸ்வநாத், டப்பிங் கலைஞர் செல்வராஜ், பரியேறும் பெருமாள் தங்கராஜ், பாடகி வாணி ஜெயராம், இயக்குநர் டி.பி. கஜேந்திரன் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தற்போது இந்த வரிசையில் ஹேம்நாக் பாபுஜியும் காலமானது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவ்ரது மறைவுக்கு திரைபிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











