தறிகெட்டு ஓடிய கார்.. தடுப்பு சுவரில் மோதி கோர விபத்து.. பிரபல இசையமைப்பாளர் சம்பவ இடத்திலேயே பலி!
சென்னை: சாலை விபத்தில் சிக்கி பிரபல இசையமைப்பாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட தஷி, 60க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
சிவக்குமார் என இயற்பெயர் கொண்ட இவர் சினிமாவிற்காக தனது பெயரை தஷி என மாற்றிக்கொண்டார்.

இசையமைப்பாளர் தஷி: இவருக்கு இசையின் மீது இருந்த ஆசையால், அப்பாவின் உதவியோடு மார்க்கிங் உதவியாளராக சிறிது காலம் வேலைப் பார்த்தார். அதன்பின் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்தான குருநாதர் நித்யானந்தம் அவரிடம் கீபோர்டு வாசிக்க கற்றுக்கொண்டார். அதன்பின் மலையாள படத்திற்கு இசை அமைத்தார். அவர் இசையமைத்த முதல் படத்துக்கே கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது சிவக்குமாருக்குக் கிடைத்தது.
பல மொழிகளில்: முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அச்சன்டே பொன்னுமக்கள், பகவான், கோபாலபுரம், வெள்ளியங்காடி, குண்டாஸ், டர்னிங் பாய்ண்ட் பல மலையாளத் திரைப்படங்களுக்கு இசையமைத்த தஷி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஒரியா, வங்காளம், ஆங்கிலம், போன்ற பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே பலி: இந்நிலையில், இசையமைப்பாளர் தஷி சாலை விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இசையமைப்பாளர் தஷி, ரியல் எஸ்டேட் வியாபாரம் தொடர்பாக, மூவேந்திரன், தமிழ் அடியான், நாகராஜ், ஆகியோருடன் கேரளாவிற்கு சென்று ஒரு இடத்தைப் பார்த்து பேசி விட்டு, நான்கு பேரும் காரில் சென்னைக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். அவர்களது கார் திருப்பூர் மாவட்டம் அவினாசி, பழக்கரை பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருக்கும்போது, காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்து, தடுப்பு சுவர் மீது பலமாக மோதி உள்ளது.
போலீசார் வழக்குப்பதிவு: இந்த விபத்தில் காரின் முன் பக்கத்தில் அமர்ந்திருந்த இசையமைப்பாளர் தஷி மற்றும் அவருடைய நண்பர் தமிழ் அடியான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மூவேந்திரன், நாகராஜ் ஆகியோர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தை ஆய்வுசெய்த போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 49 வயதான தஷியின் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











