'நாளைக்குள்ள அறிவிக்கலைன்னா... டாப் இந்தி ஹீரோவுக்கு வெறிகொண்ட ரசிகரின் வில்லங்க எச்சரிக்கை
மும்பை: நாளைக்குள் புதிய பட அறிவிப்பை வெளியிடவேண்டும் என்று நடிகர் ஷாருக்கானின் ரசிகர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான், ஆனந்த். எல்.ராய் இயக்கியிருந்த ஸீரோ என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் ரிலீஸ் ஆன இந்தப் படம், எதிர்பார்த்த வெற்றியை தராததால், அடுத்தப் படத்தை உடனடியாக ஆரம்பிக்கவில்லை.
நல்ல கதைகளில் நடிக்கலாம் என்று பல இயக்குனர்களிடம் கதை கேட்டிருந்தார். நம்மூர் அட்லீயிடமும் கதை கேட்டிருந்ததாகக் கூறப்பட்டது. இதற்கிடையே, தனது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடிய ஷாரூக் கான், சில இயக்குனர்களை மும்பைக்கு அழைத்திருந்தார்.

அட்லீ, வெற்றிமாறன்
அதில் அட்லீயும் வெற்றி மாறனும் கலந்துகொண்டனர். இந்நிலையில் இவர்கள் இயக்கும் படங்களில் ஷாரூக் கான் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், மவுனம் காத்தார், பாலிவுட் பாட்ஷா.

ஆக்ஷன் காமெடி
இந்நிலையில் பாலிவுட் இரட்டை இயக்குனர்களான ராஜ் மற்றும் டீகே இயக்கும் படத்தில் ஷாரூக் நடிக்கிறார் என்றும் ஆக்ஷன் காமெடி படமான இதன் ஷூட்டிங், அடுத்த வருடம் தொடங்குகிறது என்றும் செய்தி வெளியானது.

மலையாள இயக்குனர்
இந்நிலையில் மலையாள இயக்குனர் ஆஷிக் அபு, ஷாரூக் கான் படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். இவர், டாடி கூல், சால்ட் அண்ட் பெப்பர், 22 ஃபீமேல் கோட்டயம், மாயநதி உட்பட சில மலையாளப் படங்களை இயக்கியவர்.

ரசிகர்கள் கோரிக்கை
ஆனால், ஷாரூக் தரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் பொறுத்துப் பார்த்த ரசிகர்கள், #WeWantAnnouncementSRK ஹாஷ்டேக்கை டிவிட்டரில் டிரெண்டாக்கினர். அதில், நாளைக்குள் புதிய பட அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மிரட்டல்
அதில் ஒரு வெறிகொண்ட ரசிகர், வரும் 1 ஆம் தேதிக்குள், அதாவது நாளைக்குள் புதிய பட அறிவிப்பை வெளியிடவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன், மீண்டும் சொல்கிறேன் கண்டிப்பாகத் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











