TVK Maanadu:நாடே கவனிக்கும் முதல் மாநாடு.. அனல் பறக்க தளபதி பேசப்போகும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
விக்கிரவாண்டி: இன்று ஒட்டுமொத்த தமிழ்நாடுமே காத்துக் கொண்டு இருக்கும் விஷயம் என்னவென்றால் அது விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடுதான். இதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று அதாவது அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறவுள்ளது. மாநாடு குறித்தும் மாநாட்டிற்கு வருவோர் எவ்வாறு பாதுகாப்பாக வரவேண்டும் என்பது குறித்தும் விஜய் தனது தொண்டர்களுக்கு, கடிதங்கள் மூலம் தொடர்ந்து அறிவுருத்தி வந்தார். இன்று மதியம் 2 மணிக்கு மேல் மாநாட்டு திடலுக்கு அனைவரும் வரவேண்டும் என கூறப்பட்ட நிலையில், காலையிலேயே தடுப்புகளை உடைத்து தொண்டர்கள் திடலுக்குள் நுழைந்துவிட்டார்கள். இந்நிலையில் இன்று விஜய் என்னென்ன பேசப்போகின்றார் என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது.
நடிகர் விஜய் தான் அரசியல் கட்சி தொடங்கப்போகின்றேன் என முதன் முதலாக அறிவித்தபோது, அந்த அறிக்கையில் சில முக்கியமான விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, " தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் 'ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் 'பிளவுவாத அரசியல் கலாச்சாரம்' மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.

பேதமற்ற: ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்கக்கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்" என குறிப்பிட்டிருந்தார்.

கட் -அவுட்: மாநாட்டுத் திடலில் பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார், தமிழன்னை, சேரர், சோழர், பாண்டியர் என தமிழ் மண்ணின் வரலாற்றில் தவிர்க்க முடியாதவர்களுக்கு கட்-அவுட் வைக்கப்பட்டிருந்தது. மேலும் இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டு மண்ணின் மைந்தர்களின் உருவப்படங்கள் முகப்பு பேனரில் இடம் பெற்றுள்ளது.

உரை: இவற்றையெல்லாம் மைய்யப்படுத்திப் பார்த்தால் விஜய், மக்களைப் பிரிக்கிக்கின்ற சாதி, மத பேதங்களுக்கு எதிராக மிகவும் அழுத்தமான பேச்சினை வெளிப்படுத்தப்போகின்றார் என கூறப்படுகின்றது. இதில் மத்திய மாநில அரசுகள் குறித்தும், குறிப்பாக மதவாத அரசியலை கையில் வைத்துள்ள பாஜகவுக்கு எதிராக பேசவுள்ளார் எனவும் கூறப்படுகின்றது. அதேபோல் தமிழ்நாட்டினை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுக மற்றும் அதிமுக மீதும் அவர்களின் நிர்வாக செயல்பாடுகள் குறித்தும் மிகவும் காட்டமான விமர்சனங்களை முன்வைக்க அதிக வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகின்றது. விஜய் இன்று என்ன பேசுகின்றாரோ அதனை இணையத்தில் ட்ரெண்ட் செய்ய அவரது ரசிகர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











