Kamal: வாழ்த்துகள் ஆண்டவரே.. பாராளுமன்றத்தில் களமிறங்கும் கமல்.. M.Pஆக இன்று பதவியேற்பு..
சென்னை: பத்மஸ்ரீ கமல்ஹாசன் இன்று அதாவது ஜூலை 25 ஆம் தேதி மாநிலங்களவையில் உறுப்பினராக பதவியேற்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வந்திருந்தாலும், இன்று பதவியேற்க கமல்ஹாசன் நேற்றே டெல்லிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று அவர் பதவியேற்கவுள்ளதால், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள்.
கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக திமுக அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணி சார்பில் தேர்வு செய்யப்பட்டார். பதவியேற்பு நாள் குறித்த அறிவிப்பு வந்ததில் இருந்து ரசிகர்களும் மக்கள் நீதி மய்யம் தொண்டர்களும் எப்போதுதான் 25ஆம் தேதி வரும், " கமல்ஹாசன் எனும் நான்" எனக் கூறி கமல்ஹாசன் பதவியேற்பதை எப்போது பார்ப்பது என்று எல்லாம் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஏங்கியவர்களுக்கான நாள் இது.
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கும் நாள் குறித்த அறிவிப்புக்குப் பின்னர் கமல்ஹாசன் கடந்த இரண்டு வாரங்களாகவே மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட்டார். அதாவது, தமிழ்நாடு அரசியல் களத்தில் இருக்கும் மிக முக்கியமான அரசியல் தலைவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார். இது மட்டும் இல்லாமல் பலதரப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை சந்தித்தும் அவர்களின் கோரிக்கைகள், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த என்னென்ன கோரிக்கைகள் உள்ளது என்பது குறித்து எல்லாம் நேரடியாகவே கேட்டுத் தெரிந்து கொண்டார்.

கமல்ஹாசன்: அதாவது, மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் என பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கையை தனது கன்னிப் பேச்சில் சேர்த்து தொகுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது வேறு யாரும் செய்திடாத ஒன்று. மக்களவைக்கு தேர்வாகும் உறுப்பினர்கள் கூட தேர்தலுக்கு முன்னர்தான் மக்களைச் சந்திப்பார்கள். ஆனால் உலகநாயகனோ, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான பின்னர் மக்களைச் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டுள்ளார்.
கன்னிப் பேச்சு: ஏதோ, பத்தோடு பதினொன்றாக தான் எப்போதும் இருக்க கூடாது என்பதற்காக கமல்ஹாசன் தனது கன்னிப் பேச்சில் அனைத்து தரப்பினருக்கும் பேச வேண்டும் என மிக நீண்ட ஊரையுடன் டெல்லிக்குச் சென்றுள்ளார். இவரது கன்னிப்பேச்சு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க பலரும் ஆவலாக உள்ளார்கள். செய்தியாளர்கள் சந்திப்பில் கூட, தனது கன்னிப்பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும் என்பதை இங்கே சொல்லக் கூடாது. சில விஷயங்களை இங்கு பேசுவது போல அங்கு பேசக்கூடாது. அங்கு பேசுவதைப் போல இங்கு பேசக்கூடாது. எனது ஆறு ஆண்டுகால அரசியல் பயணத்தை கவனித்தால் புரியும் எனக் கூறினார்.

ஊழல் - லஞ்சம்: திரைத்துறையில் ஜாம்பவனாக இருந்த கமல்ஹாசன், அரசியலில் காலடி எடுத்து வைத்து ஏழு ஆண்டுகள் ஆகிறது. இந்த 7 ஆண்டுகளில் கமல்ஹாசன் இரண்டு மக்களவைத் தேர்தல், ஒரு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டுள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சி தொடங்கிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் சார்பாக முதல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஊழலற்ற தமிழ்நாடு, ஊழலற்ற இந்தியா என்பதில் எப்போதும் அக்கறை கொண்டிருப்பவர் கமல்ஹாசன்.
வாழ்த்துகள்: தனது படங்களில் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் எதிரான கருத்துக்களை தொடர்ந்து பேசிக் கொண்டே வந்துள்ளார். எனவே இவரது கன்னிப்பேச்சில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான கருத்துகள் கட்டாயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவையில் தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதியாக வீறுநடை போட வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications











