எடப்பாடி பற்றிய ரஜினியின் சர்ச்சைப் பேச்சு.. எடிட் செய்த விஜய் டிவி.. ரசிகர்கள் அதிருப்தி!
கமல் 60 நிகழ்ச்சியில் ரஜினியின் பேச்சு எடிட் செய்யப்பட்டிருப்பது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்களை எடிட் செய்து விட்டு விஜய் டிவி கமல் 60 நிகழ்ச்சியை ஒளிபரப்பியது நெட்டிசன்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் கடந்த மாதம் உங்கள் நான் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினி, கமல், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், சிவக்குமார், சத்யராஜ் என தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த முக்கிய நடிகர், நடிகையர் அனைவரும் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் ரஜினி தமிழக அரசியல் குறித்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

எடப்பாடி பழனிசாமி
``எல்லோர் வாழ்க்கையிலும் அற்புதங்கள் நிகழும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராவார் எனக் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார். ஆனால், அவர் முதல்வரானார்.

அதிசயம்.. அற்புதம்
அதுக்கு அப்புறம் அவருடைய ஆட்சி இருபது நாள் தாங்காது, ஒரு மாசம் தாங்காது, மேக்ஸிமம் நாலு மாசம், அஞ்சு மாசத்துல கவிழ்ந்துடும்னு சொல்லாத ஆளே இல்லை. அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. ஆட்சி கவிழல. நேற்றும் அதிசயம், அற்புதம் நடந்தது. இன்றும் அதிசயம் அற்புதம் நடந்துகொண்டிருக்கிறது. நாளைக்கும் நடக்கும்" என அப்போது பேசியிருந்தார் ரஜினி.
கடும் விமர்சனம்
கமல் மற்றும் தனது அரசியல் பிரவேசம் குறித்து மறைமுகமாக அப்படி அவர் பேசியிருந்தார். ஆனால், ரஜினியின் இந்தப் பேச்சு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட அதிமுகவினர் பலர் ரஜினியின் பேச்சு தொடர்பாக பதிலடி கொடுத்தனர். அப்போது இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கமல் 60
இந்நிலையில், விஜய் டிவியில் கடந்த இரு வாரங்களாக சனி மற்றும் ஞாயிறு இரவு கமல் 60 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. ரஜினியின் பேச்சைக் கேட்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை பலர் பார்த்தனர். நேற்று ரஜினியின் பேச்சு ஒளிபரப்பானது. ஆனால் அதில் எடப்பாடி பற்றிய பேச்சு எடிட் செய்யப்பட்டு விட்டது.
ரசிகர்கள் அதிருப்தி
இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்களது அதிருப்தியை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர் நெட்டிசன்கள். ‘இதை சத்தியமாக உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. நீங்களும் பயந்துட்டீங்களா?' என விஜய் டிவியை விமர்சித்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











