A.R.Rahman - இசைப்புயலே மிக்ஜாம் புயல் பாதிப்பு அவ்ளோ இருக்கு?.. இது தேவையா?.. ஏ.ஆர்.ரஹ்மானை விளாசும் ஃபேன்ஸ்
சென்னை: A.R.Rahman (ஏ.ஆர்.ரஹ்மான்) இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை ரசிகர்கள் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையை ஒரு வழி செய்துவிட்டது. 24 மணி நேரத்துக்கும் மேல் விடாமல் பெய்த மழையால் சென்னை முழுவதும் தண்ணீர் தேங்கியது. பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உடைந்து அதன் அருகில் இருக்கும் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. தொடர்ந்து பெய்த மழையால் உச்சக்கட்ட பீதியில் இருந்த மக்களுக்கு நிம்மதி தரும் விதமாக புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து கரையை கடந்துவிட்டது.

வடிந்த வெள்ளம்: புயல் சென்னையிலிருந்து ஆந்திராவை நோக்கி நகர்ந்ததை அடுத்து இங்கு மழையின் அளவு படிப்படியாக குறைந்தது. மழை குறைந்ததை அடுத்து சாய்ந்த மரங்கள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் மின்சாரமும் படிப்படியாக வழங்கப்பட்டுவருகிறது. குறிப்பாக சென்னையின் பிரதான சாலைகளில் தேங்கியிருந்த மழை நீர் சுத்தமாக வற்றிவிட்டது. இருந்தாலும் வீடுகளுக்குள் புகுந்து மழை நீர் செய்த சேதத்தை சரி செய்ய மக்களுக்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம்.
வடியாத வெள்ளம்: இப்படி பெரும்பாலான ஏரியாக்களில் நீர் வடிந்துவிட்டாலும் வேளச்சேரி, துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் நீர் இன்னும் வடிந்தபாடில்லை. அதிலும் தேங்கியிருக்கும் நீரில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களும் உலாவுவதால் மக்கள் உச்சக்கட்ட அச்சத்தில் இருக்கின்றனர். நேற்றிலிருந்தே மேற்கூறிய பகுதிகளுக்கு படகு சேவை தேவை போன்ற பதிவுகளையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.
தீவிர பணியில்: இப்படி அவதிப்பட்டு கொண்டிருக்கும் மக்களை காப்பதற்கு தன்னார்வலர்களும், தீயணைப்பு வீரர்களும் தொடர்ந்து களத்தில் இறங்கி வேலை செய்துவருகின்றனர். அந்தப் பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்கள் எப்படியாவது பத்திரமாக மீண்டுவிட வேண்டும் விரைவில் இயல்பு நிலைக்கு அவர்கள் திரும்ப வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும்.
ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்: இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானை ட்விட்டரில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். அதாவது அவர் தான் இசையமைத்திருக்கும் பிப்பா படத்தில் இடம்பெற்றிருக்கும் மெய்ன் பர்வானா என்ற பாடலை ட்விட்டரில் ப்ரோமோஷனுக்காக பகிர்ந்திருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள், ஏங்க இசைப்புயலே மிக்ஜாம் புயலால் ஒட்டுமொத்த சென்னையும் நிலைகுலைந்து போயிருக்கு. இப்படிப்பட்ட நேரத்துல இதை செய்யுறீங்களே இதெல்லாம் நியாயமா என கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











