Bigg Boss: வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை.. பிக்பாஸ் வீடு போட்டியாளர்கள் நிலை என்ன?ரசிகர்கள் கேள்வி
சென்னை: எந்த செய்தி சேனலைப் போட்டாலும் மழை வெள்ளம் குறித்த செய்திகள்தான், நாளிதழ்கள், வார இதழ்கள், இணையம், சமூக வலைதளம் என அனைத்திலும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வரும் கனமழை குறித்துதான் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றது. சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. பல இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையே மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டின் நிலை குறித்தும் அங்குள்ள போட்டியாளர்களின் நிலை குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 8 கடந்த 6ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. ஆண்கள் 9 பேர், பெண்கள் 9 பேர் என மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். இதுமட்டும் இல்லாமல், இந்த சீசனில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான போட்டி என்ற தீமுடன் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. போட்டி தொடங்கி 24 மணி நேரத்தில் போட்டியாளர் சாச்சனா வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தொடர்ந்து விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வந்த நிலையில், சாச்சனா மீண்டும் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார். மேலும் போட்டியில் தொடர்கின்றார்.

முதல் வாரத்தில் விமர்சகர் ஃபேட் மேன் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். ஆனால் முதல் வாரத்தில் அவர் மட்டும்தான் கண்டெண்ட் கொடுத்தார் என்று ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சீசனின் தொகுப்பாளராக விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். கமல் ஹாசன் போல் இல்லாமல், நேரடியாகவே போட்டியாளர்களிடம் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என பேச்சினை முடித்து விடுகின்றார்.
வெள்ளம்: ஆண்கள், பெண்கள் என அனைத்து போட்டியாளர்களும் இவரிடத்தில் தொடர்ந்து நோஸ்கட் ஆகி வருகின்றனர். போட்டி தொடங்கி நேற்று அதாவது அக்டோபர் 14ஆம் தேதி 8வது நாளுக்கான எப்பிசோட் ஒளிபரப்பப்பட்டது. 9வது நாளுக்கான ப்ரோமோக்கள் இன்று வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் ஒட்டியுள்ள மாவட்டங்கள் தொடங்கி தமிழ் நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகின்றது. தலைநகர் சென்னை வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றது. மீட்புப் பணிகளும் சீரமைப்புப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

பிக்பாஸ் வீடு: இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள பிக் பாஸ் வீடு மழை வெள்ளத்தில் பாதிப்பினைச் சந்திக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், வெள்ளத்தினால் பிக் பாஸ் வீடு பாதிக்கப்படுமானால், உடனே போட்டியாளர்களை அருகில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இதற்கு முன்னர் 4வது சீசனின்போதும் கடுமையான மழை, அதைத்தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டதால், போட்டியாளர்கள் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். மழை வெள்ளம் வடிந்த பின்னர் மீண்டும் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து: இந்நிலையில் இந்த சீசனிலும் அதுபோன்ற நிலை ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே பிக் பாஸ் வீடு செட் அமைக்கும்போது 20 அடி உயரத்தில் இருந்து ஒரு வடமாநிலத் தொழிலாளி தவறி கீழே விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், வெள்ளத்தால் வீடு பாதிப்படைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், நாளைக்கு எபிசோட் வருமா என ரசிகர்கள் வீட்டின் நிலை குறித்தும் போட்டியாளர்கள் நிலை குறித்தும் கேள்வி கேட்டு இணையத்தில் பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











