Vijay Education Award - போஸ்டரில் அப்படி நிகழ்ச்சியில் இப்படி.. என்ன விஜய் இது?.. ரசிகர்கள் கேள்வி
சென்னை: Vijay Education Award (விஜய் கல்வி விருது) விஜய் கல்வி விருது விழாவையும், லியோ போஸ்டரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக மாறியிருக்கும் லியோ பான் இந்தியா படமாக உருவாகிறது. இதன் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தச் சூழலில் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை விஜய் சந்திக்கும் விஜய் கல்வி விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

13 நேரம் விழா: நீலாங்கரையில் நேற்று நடந்த விழாவில் விஜய் பயங்கர க்யூட்டாக கலந்துகொண்டார். மாணவ, மாணவிகளுடன் அவர்களது பெற்றோரும் வந்திருந்தனர். யாரிடமும் முகம் சுளிக்காமல் அவர்களது சின்ன சின்ன கோரிக்கைகளை நிறைவேற்றி தன்னை ஒரு பக்குவப்பட்ட மனிதராக காண்பித்துக்கொண்டார் என ரசிகர்கள் புகழாரம் சூட்டிவருகின்றனர். மேலும் 13 நேரத்தில் கிட்டத்தட்ட 10 மணி நேரம்வரை விஜய் நின்றுகொண்டே சான்றிதழையும், ஊக்கத்தொகையையும் வழங்கினார்.
பெரியார், அம்பேத்கர், காமராஜர்: நிகழ்ச்சியில் அசுரன் பட வசனத்தை பேசிவிட்டு பேச்சை தொடங்கிய விஜய் பெரியார், அம்பேத்கர், காமராஜரை படியுங்கள் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். பணம் வாங்காமல் வாக்கு செலுத்த உங்கள் தந்தை, தாயிடம் சொல்லும்படி கூறினார். அவரது பேச்சு பலரிடம் பாராட்டை பெற்றாலும் சிலர் அதை விமர்சிக்கவும் செய்தனர். குறிப்பாக கல்வி தொடர்பான விழாவில் வாக்கு, வாக்காளர்கள் என கூறியதெல்லாம் அவரது அரசியல் ஆசையை அப்பட்டமாக காட்டியிருக்கிறது என்று ஓபனாகவே பேசினர்.
நடைமுறை: விழாவில் பங்கேற்றவர்கள் தீவிர சோதனைக்கு பிறகுதான் உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதாவது சிகரெட் போன்ற புகையிலை பொருட்களை யாராவது வைத்திருந்தால் அதை அவர்களிடமிருந்து வாங்கிவிட்டுத்தான் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள் என கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் பாராட்டை பெற்றாலும் மறுபக்கம் ரசிகர்களிடம் மிகப்பெரிய கேள்வியை ஏற்படுத்தியிருக்கிறது.
லியோ போஸ்டர்: விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி வருகிறது. இதனையொட்டி அன்றைய தினம் நா ரெடி என்ற சிங்கிள் பாடல் வெளியாகவிருப்பதாக படக்குழு ஒரு போஸ்டருடன் அறிவித்தது. அந்தப் போஸ்டரில் விஜய் கையில் துப்பாக்கியுடனும், வாயில் சிகரெட்டுடனும் இருந்தார். இந்தப் போஸ்டருக்கு அன்புமணி ராமதாஸ் கண்டமும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கல்வி விருது வழங்கும் விழாவுக்கு புகையிலை கொண்டு வந்தவர்களை தீவிரமாக கண்காணித்த விஜய்யோ படத்தில் சிகரெட்டை பிடித்தபடி போஸ் கொடுத்திருக்கிறார்.
எல்லாமே வியாபாரத்திற்காகவா?: எனவே புகையிலையை விஜய் எதிர்க்கிறவரா இல்லை ஆதரிப்பவரா. உண்மையில் அவர் புகையிலையை எதிர்ப்பவராக இருந்தால் படத்தில் ஏன் அவ்வாறு நடிக்க வேண்டும். அது படத்துக்காகத்தானே என்று கூறலாம். அது உண்மை என்றால் வியாபாரத்திற்காக தன்னுடைய நிஜ கேரக்டரையும், கொள்கையையும் திரைப்படத்தில் விட்டுக்கொடுப்பவரா விஜய் . எனில் இந்த சந்திப்பும் அரசியல் நோக்கத்திற்காகத்தான் நடத்தினாரா என ரசிகர்களில் ஒரு தரப்பினர் காட்டமான கேள்வியை முன்வைத்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











