இளையராஜாவும் அந்த லிஸ்ட்டில் சேர்ந்துட்டாரோ.. விடுதலை ’காட்டு மல்லி’ பாடல் காப்பியா?
சென்னை: விடுதலை படத்தில் இளையராஜா இசையமைத்திருக்கும் காட்டுமல்லி பாடல் காப்பியடிக்கப்பட்டதா என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் விடுதலை. விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படமானது ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. முதல்முதலாக ஜெயமோகன் கதையை தழுவி வெற்றிமாறன் திரைப்படம் எடுப்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிமாறனின் விடுதலை
விடுதலை படம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. இதன் முதல் பாகம் மார்ச் 31ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. முதலில் ஒரு பாகமாகவே எடுத்துவிடலாம் என முடிவு செய்திருந்த வெற்றிமாறன் படத்தின் முக்கியத்துவம் கெட்டுவிடக்கூடாது என கருதி இரண்டு பாகங்களாக உருவாக்கியிருக்கிறார். ஏறத்தாழ மூன்று வருடங்களுக்கும் மேலாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தது குறிப்பிடத்தக்கது. இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

பிரமாண்டமாக நடந்த விடுதலை இசை வெளியீட்டு விழா
விடுதலை படம் மார்ச் 31ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் அதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த 8ஆம் தேதி நடைபெற்றது. இதில் வெற்றிமாறன், இளையராஜா, விஜய் சேதுபதி, சூரி, சுகா, ஜெயமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அந்த விழாவில் விடுதலை படம் குறித்தும், வெற்றிமாறன் குறித்தும் அனைவரும் புகழ்ந்து பேசினர்.

கவனத்தை ஈர்த்த விடுதலை ட்ரெய்லர்
பெரிதும் எ திர்பார்க்கப்பட்ட விடுதலை ட்ரெய்லர் அன்றைய தினம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 'விசாரணைங்ற பேருல பொம்பளைங்க மேல வன்முறை செய்வறங்களுக்கு மரண பயத்த காட்டணும், 'பிறக்கும்போதே மேல ஒருத்தன், கீழ ஒருத்தன், சைட்ல ஒருத்தன்னு முடிவு பண்ற நீங்க பிரிவினைவாதிகளா; இல்லை எல்லோரும் ஒன்னுனு போராடுற நாங்க பிரிவினைவாதிகளா' போன்ற வசனங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. அதேபோல் ட்ரெய்லரில் இளையராஜாவின் பின்னணி இசையையும் பலர் சிலாகித்துவருகின்றனர்.

நேற்று வெளியான காட்டுமல்லி பாடல்
இந்தச் சூழலில் நேற்று விடுதலை படத்தில் இடம்பெற்றிருக்கும் 'காட்டுமல்லி' பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. பாடலை இளையராஜா எழுதி பாடியிருக்கிறார். அவருடன் அநன்யா பஃட்டும் பாடியுள்ளார். முதல் பாடலான உன்னோடு நடந்தா பாடல் போன்றே இந்தப் பாடலும் பக்கா மெலோடியாக உருவாகியிருக்கிறது. ரசிகர்களும் பாடலை ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர்.

காட்டுமல்லி பாடல் காப்பியடிக்கப்பட்டதா?
இந்நிலையில் காட்டுமல்லி பாடலை இளையராஜா தனது பாடலில் இருந்தே காப்பி அடித்திருக்கிறார் என சமூக வலைதளங்களில் பேச்சு எழுந்திருக்கிறது. அதாவது, என் மன வானில் என்ற படத்தில் இடம்பெற்றிருக்கும் 'என்ன சொல்லி பாடுவேனோ' என்ற பாடலின் ஆரம்ப ட்யூன் போல்வே; காட்டுமல்லி பாடலின் ஆரம்ப ட்யூனும் இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி காப்பி அடிக்கும் இசையமைப்பாளர்கள் லிஸ்ட்டில் இளையராஜாவும் இணைந்துவிட்டாரோ எனவும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
அதேசமயம், இளையராஜா காப்பி அடிக்கும் அளவுக்கு அவரது சரக்கு இன்னமும் தீர்ந்துவிடவில்லை; ஒன்றின் தாக்கத்திலிருந்துதான் இன்னொன்று பிறக்கிறது. அப்படியே காப்பி அடித்தாலும் அவரது ட்யூனைத்தானே மீண்டும் பயன்படுத்தியிருக்கிறார் என இசைஞானியின் ரசிகர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











