விஜய்யின் அரசியல் மாநாடு.. ஹைப்பர் பேச்சு.. தளபதி 69க்கு சிக்கல் வருமோ?.. ரசிகர்கள் கவலை
சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். படத்துக்கு தற்காலிகமாக தளபதி 69 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது. படத்தின் ஒரு ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்தார். அதற்கு முன்னதாக அவர் நடித்த வாரிசு, பீஸ்ட் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக அடி வாங்கியதால்; இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள் அவரது ரசிகர்கள். ஆனால் எதிர்பார்த்தபடி படம் இல்லை. முக்கியமாக ஸ்க்ரீன் ப்ளேவை தொய்வில்லாமல் கொண்டு செல்லும் வெங்கட் பிரபு இதில் சொதப்பிவிட்டார் என்று பலர் பேசினார்கள்.

தளபதி 69: முழுக்க முழுக்க விஜய் அரசியலில் கவனம் செலுத்தவிருப்பதால் அவர் இன்னும் ஒரு படத்தில் மட்டும்தான் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்க; கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம்தான் அவரது கடைசி படம் என்று கூறப்படுவதால்; நிச்சயம் தமிழ் சினிமா மறக்காத படமாகத்தான் இருக்கும் என்று இப்போதே பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. படத்தில் மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஹெச்.வினோத் சம்பவம்: வினோத் இப்போதைய தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவர். தனது முதல் படமான சதுரங்க வேட்டையிலேயே தன்னை நிரூபித்துவிட்டார். தொடர்ந்து அவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களில் வலிமையை தவிர்த்து மற்ற படங்கள் நல்ல வரவேற்பையே பெற்றன. எனவே விஜய்யின் கடைசி படமான தளபதி 69ஐ இயக்குவதற்கு சரியான தேர்வு வினோத்தான் என்று ரசிகர்கள் கூற ஆர்மபித்திருக்கிறார்கள்.
தவெக மாநாடு: இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது அக்கட்சி. கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடந்தது. லட்சக்கணக்கானோர் அதில் கலந்துகொண்டார்கள். மாநாட்டில் பேசிய விஜய் தனது கட்சியின் கொள்கை என்ன என்பது பற்றியும், தங்களது வழிகாட்டிகள் யார் என்பதை பற்றியும் விளக்கினார்.
சிக்கல் வருமோ?: அதேசமயம் மத்தியில் ஆளும் கட்சியையும், மாநிலத்தில் ஆளும் கட்சியையும் கடுமையாக விமர்சித்தும் பேசினார். விஜய்யின் அந்த சரவெடி பேச்சை யாருமே எதிர்பார்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சூழல் இப்படி இருக்க ரசிகர்களுக்கு புது கவலை ஒன்று வந்திருக்கிறது. அதாவது இன்னும் ஒரு படத்தில் மட்டும்தான் தளபதி நடிக்கிறார். ஆளும் அதிகாரங்களை விஜய் மாநாட்டில் விளாசியிருப்பதால் அவைகள் மூலம் தளபதி 69 படத்திற்கு சிக்கல் வருமோ என்று பேசிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். என்ன நடக்கப்போகுதோ.. பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











