அஜித்தின் அப்பா தமிழர் தான்... உண்மை தெரியாம பேசாதீங்க... டிவிட்டரில் ஆஜரான ரசிகர்கள்!
சென்னை: கோலிவுட்டின் டாப் ஹீரோவான அஜித் அடுத்து லைகா தயாரிப்பில் அவரது 62வது படத்தில் நடிக்கவுள்ளார்.
Recommended Video
ஏகே 62 என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையே, அஜித்தின் அப்பா சுப்ரமணியன் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார், அவருக்கு வயது 86.
இந்நிலையில், அஜித்தின் அப்பா கேரளாவைச் சேர்ந்தவர் என்றும், ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் எனவும் சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்தது.
இது எல்லாவற்றுக்கும் அஜித்தே உண்மையை சொன்ன வீடியோவை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அஜித்தின் தந்தை மறைவு
1993ம் ஆண்டு வெளியான அமராவதி திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் அஜித். பின்னர் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் துணையோடும் அவரின் தன்னம்பிக்கையோடும் கோலிவுட்டின் டாப் ஹீரோவாக வலம் வருகிறார். கோலிவுட் அல்டிமேட் ஸ்டாராக அஜித் பிரபலமாக இருந்தாலும், அவரது குடும்பத்தினர் குறித்து வெளியில் எந்த தகவலையும் அஜித் பகிர்ந்துகொண்டது கிடையாது. இந்நிலையில், இன்று அதிகாலை அஜித்தின் அப்பா சுப்ரமணியன் உடல் நலக்குறைவால் காலமானார்.

ரசிகர்கள் விவாதம்
அஜித்தின் அப்பா சுப்ரமணியன் 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சிகிச்சையில் இருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சென்னை பெசண்ட் நகர் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. இதனையறிந்த திரை பிரபலங்களும் ரசிகர்களும் அஜித் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அஜித் அப்பாவின் பூர்வீகம் குறித்து விவாதம் எழுந்துள்ளது.

மீண்டும் சர்ச்சை
அஜித் திரையுலகில் அறிமுகமான புதிதில் அவர் மலையாளி என செய்திகள் வெளியாகியிருந்தன. அவரது அப்பாவின் பூர்வீகம் கேரளா எனவும், ஆனால் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்கள் என்றும் கூறப்பட்டது. அதன்பின்னர் அஜித் அப்பா ஆந்திராவைச் சேர்ந்தவர் எனவும், ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டன. இதெல்லாம் அஜித்தின் ஆரம்ப காலத்தில் அவரை சுற்றி வந்த சர்ச்சைகளில் மிக முக்கியமானவைகள். அஜித்தின் அப்பா உயிரிழந்த நிலையில், தற்போதும் அதுகுறித்து விவாதம் எழுந்தன.

அஜித்தின் பேட்டி
அமரவாதிக்கு முன்பு அஜித் தெலுங்கில் பிரேம புத்தகம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனது தந்தை தமிழர் தான், தானும் ஒரு தமிழர் தான் என அஜித் பேசிய வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதில், "அஜித்குமார் நான் ஒரு தமிழன் தான், அதில் சந்தேகமே வேண்டாம். அப்பா சென்னை தான், அம்மா தான் வட இந்தியாவைச் சேர்ந்தவர்" என உறுதியாகக் கூறியுள்ளார். இதனால் அஜித்தின் தந்தை ரியலான சென்னைவாசியே, அவர் தமிழர் தான் என ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











